சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை: மேயர் பிரியா அறிவிப்பு
சென்னை: உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான சென்னை மெரினாவில், சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாகவும், போக்குவரத்தை எளிதாக்கும் விதமாகவும் புதிய 'ரோப் கார்' (Rope Car) திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று சட்டபேரவையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட் கூட்டம் தொடங்கியது. அப்போது மேயர் பிரியா 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது, வீடு இல்லாதவர்களுக்கு ரூ.12 கோடி செலவில் தற்காலிக தங்கும் இடம் அமைக்கப்படும். ரூ.10 கோடியில் சென்னை பசுமை திட்டம். கோடை காலங்களில் தூய்மை பணியாளர்களுக்கு மோர் வழங்கப்படும். சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் அண்ணா நினைவிடம் வரை ரோப் கார் சேவை தொடங்கப்படும். சுமார் 2.5 கிலோமீட்டர் முதல் 3 கிலோமீட்டர் வரையிலான இந்த வான்வழிப் பயணம், கடற்கரையின் முழு அழகையும் ரசிக்க வழிவகை செய்யும். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, சென்னைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் வரும் 20 ஆம் தேதி நடைபெறும். விவாதங்கள் முடிந்த பிறகு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டிய பொருட்கள் எடுத்துக்கொள்ளப்படும். கடந்த ஆண்டில் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டுக்கு ரூ.8404 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.