ரூ. 20 கோடிக்கு கடன்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த.. ஏழு பேர் எடுத்த விபரீத முடிவு!

Su.tha Arivalagan
May 27, 2025,04:22 PM IST

பன்ச்குலா, ஹரியானா: ஹரியானா மாநிலம் பன்ச்குலாவில், ரூ. 20 கோடி கடன் சுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. 


அனைவருமே ஒரு காரில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஆறு பேரின் உடல்கள் காருக்குள் இருந்தன. 7வது நபர் காருக்கு வெளியே உயிருக்குப் போராடிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே அவரும் இறந்து போனார். 


இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பிரவீன் மிட்டலுக்கு இருந்த சுமார் ரூ. 20 கோடி கடன் சுமையே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் எனப் போலீஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரவீன் மிட்டல், அவரது வயதான பெற்றோர், மனைவி மற்றும் 3 குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.  தங்களது உடல்களுக்கு சகோதரர் மகன் சந்தீப் அகர்வால்தான் இறுதிச் சடங்குகளை நடத்த வேண்டும் என்று மிட்டல் கடிதம் எழுதி வைத்துள்ளார். 




சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிமாச்சல் பிரதேச மாநிலம் பத்தி நகரில், ஒரு இரும்புப் பொருள் தொழிற்சாலைத் தொழிலை ஆரம்பித்தார் மிட்டல். பிசினஸ் தொடர்பாக பலரிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். வங்கிகளிலிருந்தும் கடன் பெற்றுள்ளார். இப்படியாக கடன் மற்றும் வட்டி சேர்ந்து ரூ. 20 கோடிக்கு உயர்ந்து விட்டது. இதைத் திருப்பிக் கட்ட முடியாமல் தத்தளித்துள்ளார் மிட்டல்.  கடன் தொகையை கட்ட முடியாமல் போனதால் இவரது தொழிற்சாலையை வங்கி சீல் வைத்து விட்டது.  


இதையடுத்து தனது வீட்டை விட்டு வெளியேறிய மிட்டல் ஆறு ஆண்டு காலம் குடும்பத்தினருடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் பஞ்சாப் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தார். பிறகு மீண்டும் ஹரியானா வந்தார். அங்கு மாமனார் வீட்டில் சில காலம் இருந்தார். ஒரு மாதத்திற்கு முன்புதான் தனது பன்ச்குலா வீட்டுக்குத் திரும்பினார்.   இதையடுத்தே தனது குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொள்ள தீர்மானித்தார்.


காவல்துறை உயர் அதிகாரிகள், இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.