சிறகிருந்தால் வானம் கேட்கவும்

Su.tha Arivalagan
Oct 23, 2026,01:27 PM IST

- மொழிப்பித்தன் இரா.ச. குமார்


வானம் கேட்பவரே

கவனிக்க

உங்களுக்கு

சிறகிரண்டிருக்கிறதா?


தடையில்லை

யாரும்  

வானம் கேட்கலாம்...


கேள்வியெல்லாம்

சிறகுதான் இல்லையே பிறகெதற்கு வானமென்பதுதான்...


மழுப்பலின்றி

பதில் சொல்லுங்கள்

வெறும் வானத்தை 

என்ன செய்வீர்கள்?..




சரி 

முகிலற்ற 

வெறும் வானத்தில்

பதிப்பதற்கு

கொத்துக்கொத்தாய் 

விண்மீன்களாவது

கைவசமிருக்கிறதா?..


அதுவுமில்லையா

சரி

கொஞ்சம் முகில் கூட்டமாவது 

கையிருப்பு இருக்குமா?..


சிறகு முளை விட்டு

துளிர்த்ததும்

வானம் கேட்கவும்

எந்த தரப்பிலிருந்தும்

ஆட்சேபனை இருக்காது...


நன்றாக பறக்க பறந்து பழகுங்கள்

பழகி முடித்தோமென 

தகவல் தந்தால் 

பறந்து பறந்து திரிய

ஆறேழடி 

வானமாவது  கிடைக்கும்