Short Story: ருத்ர தாண்டவம்!
- விஜயலக்ஷ்மி கண்ணன்
சக்தி அழையா விருந்தாளியாக தன் பிறந்த வீட்டுக்கு புறப்பட்டாள். காமேஷ் பல முறை வேண்டாம் என்று தடுத்து நிறுத்தியும் அவள் கேட்கவில்லை. மாறாக காமேஷையும். உடன் வர வற்புறுத்தினாள்.
இரண்டு வருடங்கள் முன்பு அவள் காமேஷை உயிர்க்கு உயிராய் காதலித்து தந்தை தசகனிடம் தன் விருப்பத்தை சொன்ன போது அவள் அடிபட்ட புறா போல் தடுமாறினாள்.
"அந்த காசுக்கு பெறா பயலோடு நீ தொலைந்து போ.எனக்கு இப்படி ஒரு மகள் இல்லை என்று நினைத்து நிம்மதியாக வாழ்ந்துகிறேன்" என்று அவளை வீட்டை விட்டே துரத்தினார்.
ஒரு நாள் முழுதும் சக்தியை அறையில் அடைத்து அவள் மனமாற்றத்தை எதிர்பார்த்தார். அவளும் திடமாக இருந்ததால் அவளை கடிந்து துரத்தி விட்டார்.
அவள் ஒரு அமெரிக்கா ஐ டி நிறுவனத்தில் பொறுப்பான உத்தியோகத்தில் இருந்தாள். அவளுடன் வேலை பார்த்த காமேஷை அவளுக்கு மிகவும் பிடித்துப் போய் இருமனம் கலந்த திருமணம் முடிந்தது.
இப்பொழுது சக்தியின் ஒரே தம்பி நாகுவின் திருமணம் நிச்சயம் செய்யப் பட்டு திருமண நாள் குறித்து நாகு என்னும் நாகராஜன் அழைப்பிதழை இணைய தளத்தில் அனுப்பி அவளை நிச்சயம் காமேஷ் அத்தானோடு வந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று கெஞ்சி கேட்டுக்கொண்டான்.காமேஷையும் தனியாக அலைபேசியில் மரியாதைக்கு அழைத்தான்.
காமேஷ் தெளிவாக சொல்லிவிட்டான்"சக்தி, நாம் போக வேண்டாம்.உன் தம்பியை அவன் மனைவியோடு வரச் சொல்.
நாம விருந்து வைப்போம். ஸ்டார் ஹோட்டல் லே கூட வைக்கலாம். ஆனா,இந்த கல்யாணத்துக்கு போக வேண்டாம். சொல்வதை கேள்" என்றான்.
சக்தி பிடிவாதக் காரி தான்,ஆனாலும் இப்படியா தன்மானம் இல்லாமல்?காமேஷுக்கு கோபம் வந்தது . ஆனாலும் அவள் மனதை புண் படுத்த விரும்பவில்லை.
இன்னும் கொஞ்ச நேரத்தில் நாகு மாப்பிள்ளை அழைப்பில் பிசி ஆகிவிடுவான் என்று கற்பனையில் உலாவினான்.
"நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கலை. பதிவு திருமணம்"என்று தனக்குள் முணுமுணுத்து கொண்டான்.
சக்தி இரவு சாப்பாடு பண்ணி வெச்சு தான் போயிருந்தாள். உண்டு போய் படுத்தான்.
இரவு 11 மணி இருக்கும். வாசல் அழைப்பு மணி அடித்தது.
"யாராக இருக்கும்"கதவை திறந்த காமேஷ் அழுது கலங்கி நின்று கொண்டிருந்த சக்தியை கண்டதும் ருத்ர தாண்டவம் ஆடவே அவனை சமாளிக்க முடியாமல் சக்தி தவித்தாள்.
இத்தனை அன்பான் கணவர் சொல்வதை தட்டிக் கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய் அவமானப் பட்டதை நினைந்து வருந்தினாள்.
"உன்னை.யார் அழைத்தார்கள்? நான் அழைக்கவில்லை. எங்களை மதிக்காத உன்னை பார்க்கக் கூட விருப்பம் இல்லை. இங்கிருந்து போய் விடு" என்று முகத்தில் அடித்தாற்போல் சொன்ன அப்பாவை நினைத்து வெறுத்தாள்.
"அம்மா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இப்படி நடக்குமா?" என்று வினவிக் கொண்டாள்.
கோபத்தில் காமேஷ் தலை கால் புரியாமல் கோரமாக அந்த சக்தியை பிரிந்த சிவன் போல் நெருப்பாக நின்றான்.
(விஜயலக்ஷ்மி கண்ணன் வழக்கறிஞர், கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். வசிப்பது சென்னை அருகே கூடுவாஞ்சேரி)