ஏன் இந்த அவசரம்...? பாரதிராஜா பற்றி தவறான தகவல்கள் பதிவிடுவோர் கவனத்திற்கு

Su.tha Arivalagan
Jan 05, 2026,01:44 PM IST

-சுமதி சிவக்குமார்


சென்னை : நேற்றிரவு இயக்குநர் பாரதிராஜா மறைந்ததாக அஞ்சலி பதிவுகள் ஃபேஸ்புக்கில் வந்ததும், அதனை நம்புவதை விட சந்தேகிக்கத்தான் முதலில் தோன்றியது. காரணம் அவசரமாக ஃபேஸ்புக்கில் அஞ்சலி செலுத்துவோர் வரலாறு அப்படி இருக்கிறது . அவ்விதமாக அது பொய்யாகிப் போனதில் எனக்கு சந்தோஷமே. இப்படி அவசரப்படுவது இவருக்கு மட்டும் புதிதாக நிகழ்ந்தது அல்ல. தமிழ்நாட்டின் இரண்டு முன்னாள் முதல்வர்களின் இறுதி நாட்களில் ஃப்ளெக்ஸ்கள் அச்சிடப்பட்டு மறைத்து வைத்திருந்து காத்திருந்ததையும் மறந்துவிட முடியாது. 


பாரதிராஜாவின் படம்  மற்றும் அவருடன் எடுத்துக் கொண்ட நிழற்படங்களை நேற்றிரவு பகிர்ந்து விதவிதமாக எழுதப்பட்ட அஞ்சலிப் பதிவுகளில் பெரும்பாலானவற்றை இப்போது பார்க்க முடியவில்லை. தவறுதலாக, அவசரமாகப் பதிவிட்டது குறித்த வருத்தம், மன்னிப்பு குறித்த பதிவுகளையும் பார்க்க முடியவில்லை. ஏனிந்த அவசரம்...??




சமூக ஊடகங்களில் பிரபலங்களின் மறைவு உட்பட எதிலும் அவசரப்பட, எல்லோருக்கும் முன் தாம் அந்த பதிவை பதிக்க வேண்டும் எனும் வேகம் பலருக்கும் உள்ளது. தாம் இந்த வாய்ப்பை தவற விட்டு விடுவோமோ எனும் பதட்டம் பலருக்கும் உண்டு என நினைக்கிறேன்.'இமயம் சரிந்தது’ எனும் டெம்ப்ளெட் பதிவினைப் பார்த்தேன். பாராதிராஜா நலம் பெற்று வந்து இந்த பதிவினை படித்தால் சிரிப்பார். காரணம் அவருடைய பல திரைப்படங்கள் இன்றளவும் புத்தம் புது உணர்வினைத் தரும் வகையிலேயே இருக்கின்றது.


அந்தளவில் இமயம் என்பது அவர் படைப்புகளின் வாயிலாக என்றும் சரியாக வராது என்று தெரியாமல் சொல்கிறார்கள். யாரும் இருக்கும் போது கொண்டாடப்படுவதைவிட  இல்லாத போது கொண்டாடப்படுவதே மிகுதியாக இருக்கின்றது. பாரதிராஜாவின் பங்களிப்பு குறித்து அவ்வப்போது சந்தோஷமாக எழுதி இருந்தாலும் அவர் செய்த புதுமைகளுக்கு நிகராக அவர் சமூக ஊடகங்களில் கொண்டாடப்பட வேண்டியது இன்னும் மிச்சம் இருக்கின்றது.


அதனை அவர் மறைந்த பிறகு அஞ்சலிப் பதிவுகளின் வாயிலாக மட்டுமே கொண்டாடப்படுவதாக இல்லாமல் வாழும் காலத்திலும் கொண்டாடப்படக் கூடியதாக அமைய வேண்டும்.முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜா அவர்கள் நலமுடன் மீண்டு வர  இறைவனை வேண்டுவோம். அவர் குறித்த கொண்டாட்டமான படைப்புகளை வாசிக்கட்டும். மகிழட்டும். மக்கள் மன நிறைவு கொள்ளட்டும்.


- சுமதி சிவக்குமார்,  தென்தமிழ் கட்டுரை எழுத்தாளர்