டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவுக்கு பிடிவாரண்ட்: தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

Su.tha Arivalagan
Jul 29, 2026,01:28 PM IST

மாஸ்கோ : பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம் (Telegram) நிறுவனர் பாவெல் துரோவ் (Pavel Durov) மீது ரஷ்ய அரசு பிடிவாரண்ட் பிறப்பித்து, அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு:


டெலிகிராம் செயலி மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு உதவியதாகப் பாவெல் துரோவ் மீது ரஷ்யக் குற்றப்பிரிவு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிரக் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர். குறிப்பாக, உக்ரைன் மற்றும் பல்வேறு தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் டெலிகிராமில் பயன்படுத்தி வரும் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, அவற்றை டெலிகிராம் தளத்தில் இருந்து நீக்கவோ இல்லை என்று ரஷ்ய அரசு குற்றம் சாட்டியுள்ளது.


ரஷ்யாவின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இதுபோன்ற சேனல்களை நீக்கக் கோரிப் பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், பாவெல் துரோவ் நிர்வாகம் எந்தவொரு கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே அவருக்கு எதிராக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதிகரிக்கும் சர்வதேச சிக்கல்கள்:




டெலிகிராம் செயலி தனது பயனர்களின் தரவுப் பாதுகாப்பு (Data Privacy) மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறி வருகிறது. எனினும், சட்டவிரோதச் செயல்பாடுகள், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு டெலிகிராம் பயன்படுத்தப்படுவதாகப் பல்வேறு நாடுகளும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.


ஏற்கனவே பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் விமான நிலையத்தில் பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து தற்போது ரஷ்ய அரசும் பாவெல் துரோவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவருக்குப் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது டெலிகிராம் நிறுவனத்திற்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.


தொடரும் ரஷிய - டெலிகிராம் மோதல்:


ரஷ்யாவில் பிறந்து வளர்ந்த பாவெல் துரோவ், அந்நாட்டு அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், பல ஆண்டுகளுக்கு முன்பே ரஷ்யாவை விட்டு வெளியேறினார். தற்போது ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ள அவர் மீது, ரஷ்யா எடுத்துள்ள இந்த நடவடிகையானது இணையப் பயன்பாடு மற்றும் தகவல் தொழில்நுட்ப உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் டெலிகிராம் நிறுவனம் அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைச் சர்வதேசத் தொழில்நுட்ப மற்றும் அரசியல் வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.