ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரம்.. புதிய தாக்குதலில் இறங்கிய ரஷ்ய ராணுவம்

Su.tha Arivalagan
Dec 24, 2025,03:38 PM IST

- அ.சீ. லாவண்யா


கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய படைகள் புதிய கட்டமாக பெரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இந்த தாக்குதல் உக்ரைனின் பல பகுதிகளில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.


கிடைத்துள்ள தகவல்களின் படி, உக்ரைனின் 13 பகுதிகளை குறிவைத்து ரஷ்யா விமானங்கள் மற்றும் சுமார் 650 ட்ரோன்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் முக்கிய நகரங்களில் சைரன் ஒலிகள் எழுந்து, பொதுமக்கள் பாதுகாப்பு தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்தனர்.


இந்த தாக்குதலில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மின் வசதி கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டதால் மக்கள் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.




தாக்குதல்களின் விளைவாக குறைந்தது சிலர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப தகவல்கள் கூறுகின்றன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.


இதற்கிடையில், ரஷ்ய தாக்குதல்களை கடுமையாக கண்டித்துள்ள உக்ரைன், சர்வதேச சமூகத்திடம் கூடுதல் ராணுவ மற்றும் மனிதாபிமான உதவிகளை கோரியுள்ளது. மேற்கத்திய நாடுகளும் நிலைமையை கவனமாக கண்காணித்து வருகின்றன.


போர் நீடிக்கும் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உலக அரசியல் மேடையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.


(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)