மிரட்டுவதற்கு முன்பு யோசிச்சுப் பேசணும்.. அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு.. ரஷ்யா எச்சரிக்கை
மாஸ்கோ: அணு ஆயுதங்கள் குறித்து யார் பேசுவதாக இருந்தாலும், மிரட்டல் விடுவதாக இருந்தாலும், யோசித்து பேச வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு, ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
நான் அமெரிக்காவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களின் இடத்தை மாற்ற உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார் அதிபர் டிரம்ப். இது ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இதற்கு ரஷ்யா தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், டிரம்ப்பின் அறிவிப்பை பெரிய விஷயமாகக் கருதவில்லை. ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளுக்கு இடையே போர் வரலாம் என்று பேசியிருந்தார். அதற்குப் பதிலாகவே, இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை சரியான இடங்களுக்கு நகர்த்த டிரம்ப் உத்தரவிட்டதாகக் கூறியிருந்தார்.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் இப்போதே போர்த் தயார்நிலையில் உள்ளன. இது ஒரு தொடர்ச்சியான வேலை. ஆனால் பொதுவாக, நாங்கள் இப்படிப்பட்ட விவாதங்களில் ஈடுபட விரும்பவில்லை, கருத்து சொல்லவும் விரும்பவில்லை. அணு ஆயுதங்கள் பற்றிப் பேசும்போது அனைவரும் மிகவும், மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று மறைமுகமாக அமெரிக்காவை எச்சரித்தார் அவர்.