ஆறா வடு!
- ஆனந்தி. ச
முகத்தில் சுள்ளென்று சூரிய கதிர்கள் பட்டவுடனே பட்டென்று எழுந்தாள் பார்வதி..
“ம்ம் மணி என்ன இருக்கும் என எண்ணியவாறே எழுந்து மணியை பார்த்தாள். மணி 6 45 ஆகி இருந்தது .. வேலைக்கு செல்லும் பொழுது இதுமாதிரி எழுந்திரிக்க முடியுமா? முடியவே முடியாது.
பார்வதி பத்தாவது வகுப்பெடுக்கும் ஒர் அரசு பள்ளி ஆசிரியை. அவளது பள்ளி வீட்டிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. காலை 7 மணி பஸ்ஸை பிடித்தால் மட்டுமே நேரத்துடன் பள்ளி செல்ல முடியும். அதற்குள் சமையல் வேலையை முடித்து கிளம்பவேண்டும் .
மீதி வேலைகள் அனைத்தும் பள்ளி முடித்து வந்தபின்பு தான். அவளும் விருப்ப ஓய்வு பெற்றுவிடலாம் என்று நினைப்பதுண்டு ஆனால், இந்த விடுமுறை நாட்களையே அவளால் தள்ள முடியவில்லையே? விருப்ப ஓய்வு பெற்று என்ன செய்யப்போகிறேன் என்று நினைத்து அடுத்த வருடம் வாங்கலாம், அடுத்தவருடம் வாங்கலாம் எனச்சொல்லி சொல்லி மூன்று ஆண்டுகளை கழித்துவிட்டாள். இன்னும் மூன்று ஆண்டுகள் மட்டும்தான் இன்னும் ஓய்வு பெறுவதற்கு இருக்கிறது..
படுக்கையிலிருந்து எழுந்தவளின் மனது நாளை வெளிவரயிருக்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்தது.
“மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பாஸ் ஆகவேண்டுமே” கடவுளிடம் வேண்டியது அவள் மனம். மாணவர்கள் கவலை படுவார்களோ இல்லையோ? அவளின் கவலை தொடங்கிவிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு , படிப்பு படிப்பு என்பதை தவிர வேறு விஷயங்களை சொல்ல மறந்துவிடுகிறோமோ? என எண்ணியபடியே .. டிவியை ஆன் செய்தாள்.
ஆன் செய்த வினாடியே .” பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9 30 மணி அளவில் வெளியாகிறது என்ற அறிவிப்பை பார்த்தவளின் மனதில் .. பட்ட உழைப்பின் பலன் நாளை தெரிந்துவிடும் என எண்ணினாள்.
அவள் படித்த காலத்திற்கும் இந்த காலத்திற்குமான இடைவெளியை எண்ணி பார்த்தாள். தேர்வு முடிந்த கையுடன் உடனே சம்பந்தபட்ட பாட ஆசிரியரை சந்தித்து , “ நல்லா எழுதியிருக்கோம் என கூறுவதும், ரிசல்ட் வரும் நாளன்று பள்ளியில் அனைவரும் சூழ்ந்து வகுப்பாசிரியரையும் பாட ஆசிரியரையும் திக்குமுக்காட வைப்பதும் ..ம்ம் அதெல்லாம் அந்த கால இனிமையான நினைவுகள்..
இப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் குறந்துள்ளதாகவும் தோன்றியது அவளுக்கு.
ரிசல்ட் , ரிசல்ட் என ரிசல்ட் பின்னாடியே ஓடுகிறோம். 100 % ரிசல்ட் கொடுத்துவிட்டால் மட்டும் அவர் சிறந்த ஆசிரியராக ஆகிவிடுவாரா? அல்லது நூற்றுக்கு நூறு வாங்கிய பிள்ளைகள் மட்டும் சிறந்த பிள்ளைகளாக ஆகிவிடுவார்களா?
படிப்பவர்கள் , படிக்கத்தெரியாதவர்கள் என அனைவருக்கும் சொல்லிக்கொடுப்பதுதானே ஒர் ஆசிரியரின் பணி. இன்னும் சொல்லப்போனால், படிக்காத மணவனுக்கு தான் நம் சேவை தேவை.. படிக்கின்ற மாணவர்களுக்கு நம்முடைய வழிகாட்டுதல் மட்டுமே போதுமானது..” .. என்ற அவள் எண்ணத்திலிருந்து அவளை மீட்டது தொலைபேசி அழைப்பு..
கூப்பிட்டது பள்ளி மாணவன் . சராசரிக்கும் கீழே மதிப்பெண்கள் வாங்கக்கூடிய மாணவன்.
“ டீச்சர் நாளைக்கு ரிசல்டா டீச்சர்?
“ஆமாடா தம்பி”
“நான் பாஸாயிடுவேனா டீச்சர்? “
“ கண்டிப்பா! ,உனக்கு என்ன சந்தேகம்?
“ இல்ல டீச்சர் பயமாயிருக்கு.”
“ நான் கொஞ்சம் சரியா எழுதல .”
“ சரி பரவாயில்ல பார்த்துக்கலாம், பெயிலா போனாக்கூட பார்த்துக்கலாம், உடனடி தேர்வு இருக்கு எழுதிக்கலாம்”
என அவனை தேற்றும்விதமாக கூறி போனை கட்செய்தாள்.
மறு நாள் பொழுது விடிய பள்ளிக்கு பரபரப்புடன் சென்றாள் .. பள்ளியில் தேர்வு எழுதிய 73 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் பெயிலாகியிருந்தனர் .. இதில் அந்த மாணவனும் ஒருவன். அவன் பள்ளிக்கு வந்திருந்தான் .. அவனை கனிவுடன் அழைத்து பேசத்தொடங்கினாள் பார்வதி..
“ எத்தனை பாடத்தில பெயில் டா ?
“ இரண்டுல பாஸ் “
“ ஓ மூணு பாடத்துல பெயிலா? “
ரெண்டு பாஸ் ஆயிட்டல்லடா? அப்புறம் என்னடா?"
நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசியவள், “உடனே உடனடி தேர்வில் பாஸ் ஆகி பிளஸ் ஒன் கூட சேர்ந்துக்கலாம்டா தம்பி கவலைப்படாதடா” என்றவள் .. தேர்வு பற்றிய பகுப்பாய்வை முடித்தவள் . வீட்டிற்கு வரும்பொழுது மணி 4 30 ஐயும் தாண்டியிருந்தது.
அன்று முழுவதும் .. அனைத்து வாட்ஸ் அப் ஸ்ட்டேஸ்லும் , இந்த தேர்வை பற்றிதான். மாணவர்களின் மனநிலை பாதிக்கக்கூடாது என்பதற்காகதான் ஸ்டேட் பர்ஸ்ட் செகண்ட் ரேங்கிங்க் முறை எடுக்கப்பட்டாலும், அனைவரின் மனதிலிருந்தும் அது நீக்கப்படவேயில்லை.
அடுத்தவர்களை ஒப்பிட்டு பார்ப்பதையே விரும்புகிறது நம் மனம். பெற்றோர்களோ, பாரு அந்த பையன் எவ்வளவு மார்க் என்றும், அக்கம் பக்கம் வீட்டினிடையே ஒப்பிடுதலும் வகுப்பில் உள்ள மாணவர்கள் தங்களை விட அதிக மார்க் எடுத்த மாணவர்களை ஒப்பிட்டு அழுது மனம் வருந்தியதையும் நினைத்து பார்த்தால் பார்வதியின் மனமும் வருந்துகிறது..
அனைவரின் உடலமைப்பு மாற்றங்களுடன் காணப்படுவது போல் கற்றல் திறனும் மாறுபடுகிறதன்றோ? இதை ஏன் மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது?
மதிபெண்கள் பல எடுத்து தேர்வில் பற்பல வெற்றி கண்டவர்கள் . வாழ்வில் தோல்வி அடைகிறார்கள்.. வாழ்கை பாடம் முக்கியம் , அதை கற்றுதர பல ஆசிரியர்கள் தவறுகிறார்கள். எதை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் .. வாழ்வில் வெற்றி கண்டவர்களை உருவாக்கியவர்களே ஆசிரியர்களே சிறந்த ஆசிரியர்கள்.
பாடநூலைத்தாண்டிய பல விஷயங்கள் உள்ளன.
தேர்வு முடிவு வரும்முன் தூக்கிலிட்டுகொண்ட மாணவி ஒருத்தியின் முகம் பார்வதிக்கு நினைவில் வந்தது. இப்பொழுது அம்மாணவி நல்ல மதிப்பெண்களையே பெற்றுள்ளாள். நல்ல மதிப்பெண் என்றால் அவள் நன்றாக படிக்ககூடிய மாணவிதானே? அவளுக்கு எதற்காக இந்த எண்ணம் வந்தது? கண்டிப்பாக தேர்விற்காக அல்ல..
வேறு எக்காரணமாக இருந்தாலும் சரி .. பிரச்சனைக்கு தீர்வு இல்லாமல் இருக்கப்போவதில்லை . உயிரை மாய்ந்துகொள்ளவதில் என்ன கிடைக்க போகிறது?
இதில் அவளுக்கு பாடம் எடுத்த எனக்கு மட்டுமல்ல அனைத்து ஆசிரியர்களுக்கும் தோல்விதானே? வருடா வருடம் மாணவர்கள் மாறலாம் , ரிசல்ட் கூட மாறலாம் ஆனால் இந்த மாதிரியான விஷயங்களால் ஏற்பட்ட ரணங்களால் வந்த வடு மட்டும் மாறாது..
நினைவிலிருந்து மீண்ட பார்வதி நிஜத்திற்கு வந்தாள் . அடுத்த ஆண்டுக்கான ஆயுத்த பணிகளில் கவனத்தை செலுத்த முற்பட்டு தன் கைப்பையை எடுத்த படி வெளியே செல்ல எத்தனித்தாள்.
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)