வேலை
- ச. ஆனந்தி
“என்ன இந்த பரபரப்பான வாழ்க்கை? “அலுத்தபடியே துணிகளை அடித்து தோய்த்தபடியே முணுமுணுத்தாள், வந்தனா. காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரையில் வேலை வேலை வேலை .. அப்பப்பா இந்த வேலைகளுக்கு ஓய்வே கிடையாதா? அலுவலக வேலைகளிருந்து ஓய்வளிப்பதுபோல் , யாரேனும் 50 வயதாகிவிட்டது, இனிமேல் உனக்கும் வீட்டு வேலைகளிருந்து ஓய்வு என ஒரு சட்டம் போடமாட்டார்களா?
மனம் அங்கலாய்த்துகொண்டது.
வீட்டிலிருக்கும் அனைவரும் வெளியில் செல்லும்முன் சமையலறையில் முழு வேலை.. அவர்கள் அனைவரும் சென்றவுடன் மற்றவேலைகளை தொடங்க வேண்டும். காலையில் தொடங்கப்பட்ட அவ்வேலை முடிவதற்குள் அனேகமாக மாலை ஆறு மணியாகிறது .. பின்னர் அனைவரும் வீட்டிற்கு வரதொடங்கியபின்னர் , இன்னும் வேலை பளு அதிகமாக தொடங்குமே தவிர குறைவதில்லை.
“சே! என்னடா வாழ்க்கை இது ?என வந்தனா நினைக்கத்தொடங்க ஆரம்பித்த அந்த நொடியில் பக்கத்து வீட்டிலிருந்து” என்ன இந்த வாழ்க்கை ?என்ற எண்ணம் தோன்றக்கூடாது.என சின்னக்குயில் சித்ரா அம்மாவின் பாடல் வரிகள் மனதுக்கு இதமளித்தது..
வந்தனா பி. எஸ்ஸி கம்ப்யூடர் சயின்ஸ் படித்திருந்தாள் ... அப்பாவின் பிடிவாதத்தால் உடனே திருமணம் ஆனது..
“அப்பா நான் இரண்டு வருடம் வேலை பார்த்துட்டு கல்யாணம் பண்ணிக்கிறேனே”.. என்றவளிடம்
“என்னமோம்மா அப்பா உன்னைய படிக்க வச்சுட்டேன், உன் புகுந்த வீட்ல போய் வேலையத் தேடிக்கோமா” என்றார்.
சரி கல்யாணம் பண்ணி வந்த இடத்தில் வேலை செய்யலாம் என்றிருந்தவள் கல்யாணம் பண்ணிய வீட்டில் மட்டுமே வேலைபார்ப்பவளானாள்.
திருமணமாகி வந்த பொழுது ”ஊர் புதிது கொஞ்சம் பழகட்டும் வேலைக்கு அனுப்பலாம்” என்ற மாமியாருக்கு தலையை ஆட்டினான் வந்தனாவின் கணவன்.
ஆறு மாதம் ஆனவுடனே ஊர் கொஞ்சம் பழகியதும் ஏங்க நான் வேலைக்கு போகட்டுமா? என்றவளிடம் “ ம் தாரளமா போயேன் “ என்றான் அவள் கணவன். வேலைக்கான விண்ணப்பத்தை தபாலில் அனுப்பிவைத்து வந்தவளுக்கு ஒரே வாந்தி மயக்கம்..
டாக்டரிடம் போனவள்,கர்ப்பமாக இருப்பது உறுதியாகியது.. பிறகெங்கே வேலைக்கு போவது?
குழந்தை பிறந்து பிறகு பார்த்துகொள்ளலாம் என மாமியார் ஆடர் போட, வேலைப்பார்க்கும் எண்ணத்தையும் தள்ளிப்போட்டாள் வந்தனா.
மூத்தவள் பிறந்து அவள் வளர்ந்து மூன்று வயதானதும் , மறுபடியும் கர்ப்பமானாள். அவள் பையனுக்கும் மூன்று வயது வரும் வரை வேலைபார்க்கும் எண்ணமே இல்லாதவளுக்கு, வேலை பார்க்கும் எண்ணம் தோன்ற , கணவனிடம் ஆசையாக கேட்டாள்.
"இதோ பார் வந்தனா, அம்மா அப்பாவிற்கு முன்ன மாதிரி முடியல .. வயசானவங்கள வீட்டுல விட்டுட்டு எங்க வேலைக்கு போறது? நீ வேலைக்கு போனா பள்ளியிலேர்ந்து வரும் குழந்தைகளை யாரு பார்க்கிறது ?
“நீ சம்பாரிச்சு தான் இந்த குடும்பத்த நடத்தனுமா? நானே கை நிறைய சம்பாதிக்கிறேன் அது போதும்” என அவள் வாய்க்கு பூட்டு போட்டான் அவள் கணவன்.
சம்பளம், பணம் சம்பாதித்தல் அவள் எண்ணமில்லை . தான் படித்தது வீண் போகக்கூடாது என்பதே அவள் எண்ணம்.
ஆனால் அவளின் எண்ணத்தை கேட்கத்தான் ஆளில்லையே. அவளின் மகள் தற்பொழுது பி இ முடிக்கப்போகிறாள். மகன் எம். பி பி எஸ் முதலாமாண்டு.. வாசலில் காலிங்க் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கதவை திறந்தவள் மகிழ்ச்சியுடன் “ அம்மா அப்பா வாங்க வாங்க .. என்னப்பா திடீர்ன்னு வந்துருக்கீங்க ? உங்க அண்ணனுக்கு இந்த பக்கம் ஏதோ வேலைன்னு சொன்னான் மா சரி அவனோட வந்தா உங்க எல்லாரையும் பார்த்துட்டு போலான்னுதான் என்றவர், வந்தனாவின் மாமனார் மற்றும் மாமியாரிடம் நலம் விசாரித்தார்.
வந்தனாவின் வீட்டிலிருந்து வருபவர்கள் யாரும் ஒரு இரவு கூட அவர்கள் வீட்டில் தங்க மாட்டார்கள். காலையில் வந்தால் மாலையிலேயோ , அல்லது இரவு அதிகபட்சம் ஒன்பது மணியோ, தங்கள் ஊரைப்பார்க்க கிளம்பிவிடுவார்கள்.
வந்த வந்தனாவின் அப்பா பேத்தியை உச்சி முகர்ந்து நலம் விசாரித்தார்.
“டேய் அம்மு இந்த வருஷம் படிப்பு முடியுதே அப்புறம் என்ன பண்ண போற? என்று வினாவினார். எங்கே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்கத்தொடங்கிவிடுவாறோ? என்ற அச்சத்துடன் அடுக்களையில் காபி போட்ட படி காதுகளை மட்டும் ஹாலில் வைத்தபடியிருந்தாள்.
வந்தனாவின் மகள் கேள்விக்கு பதிலளிக்கு முன்னரே ..பாப்பா இப்பெல்லாம், ஒரு டிகிரி பத்தாது, மேல படிச்சு , நல்ல வேளைக்கு போய் நல்லா சம்பாதிக்கணும் செல்லம் என்றவரை ..அடுக்களையிலிருந்து மூச்சிரைக்க ஓடி வந்து பார்த்தாள்
நம் அப்பா தானா? இப்படி சொன்னது, வந்தனா தன் மகள் என்ன சொல்லப்போகிறாள் என அவளின் முகத்தை பார்த்தபடியே நிற்க ,அவளின் மகளோ , “தாத்தா போங்க தாத்தா , இன்னும் இரண்டு வருஷம்
நான் படிச்சி வேலைக்கு போய் சப்பாதிக்கறதுக்குள்ள நான் கிழவியாயிடிவேன். அதனால நான் படிச்சி முடிச்சிட்டு நல்லா சம்பாதிக்கிற ஒரு ஆளை பார்த்து கல்யாணம் பண்ணி செட்டிலாகிட வேண்டியதுதான் “ என்றாள்.
இப்பதிலால் அதிர்ச்சியடைந்தாலும், அப்பா என்ன சொல்லப்போகிறார் என்பதிலேயே கவனமாக இருந்தாள், வந்தனா.
"என்னம்மா படிச்ச பொண்ணு வேலைக்கு போறதுதானே அழகு ? நீ என்னம்மா? கல்யாணம் வேணுன்னு சொல்ற என்று கொஞ்சம் கோபம் கலந்த குரலில் கூறியவரிடம்..” ஏன் தாத்தா எங்கம்மாவும் படிச்ச பொண்ணுதானே ? அவங்க வேலைக்கு போகாதது மட்டும் அழகா? எங்கம்மாக்கு ஒரு நீதி எனக்கு வேறயா? என வெடுக்கென கேட்டு போனைத்தூக்கி உள்ளே சென்றாள்.
அம்மாவின் ஆசை அன்பு மகளுக்கு தெரிந்திருக்கிறது .. அப்பாவோ சாட்டை அடி வாங்கியது போல் யோசிக்க ஆரம்பிக்க .. வந்தனா அப்பாவிடம் , “விடுங்கப்பா அவ சின்ன பொண்ணு தெரியாம சொல்லிட்டா எனச்சொல்லி கொண்டேயிருக்கும்பொழுதே வந்த மகள் .. அம்மா நான் தாத்தாக்கு அவர் அப்போ பண்ணியது தப்புன்னு புரிய வைக்க தான் அப்படி பேசினேன் .. சாரி தாத்தா என்றவள் தாத்தாவை கட்டியணைத்தவள்.
அம்மாவிடம் திரும்பி அம்மா இப்ப நீங்க வேலைக்கு போறீங்களா ? சொல்லுங்க .. போகலாம் என அம்மாவை பார்த்து கண் அடித்தவளிடம் ..ஐயோ எனக்கு அடுப்படியில ஆயிரம் வேலையிருக்குப்பா என கூறி அடுக்களைக்குள் நுழைந்தவள்.
ம் நான் படிச்ச படிப்பு மறந்தே போன காலத்துல எங்கேயிருந்து வேலைக்கு போக ? என அங்கலாய்த்துகொண்டாள் வந்தனா.
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர்( ஆங்கிலம்), அ மே நி பள்ளி, கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)