படிக்காத மேதை!
- ஆனந்தி.ச
டடட்… பாம் ..பாம் என வண்டி சத்தத்துடனும்,ஹாரன் ஒலியை எழுப்பியபடி குறுகலான சந்தில் இருந்த தன் வீட்டு வாசலில் இரு சுவர்களை உரசியபடியே தன் ஆட்டோவை பார்க் செய்தான் மணி.
மிக மிக குறுகலான சந்தில் எப்படித்தான் தினமும் நிறுத்துவதும் மீண்டும் எடுப்பதுவும் மாய் ? .. மணியால் மட்டுமே இது சாத்தியம்.
அந்த ஊரில் உள்ள நேர்மையான ஆட்டோகாரர்களில் மணியும் ஒருவன் . போகும் தூரத்திற்கேற்ப பணம் பெறுவதும்., ஆட்டோகாரன் என்பதையும் தாண்டி , தான் மனிதாபிமானம் உள்ள ஒரு சராசரி மனிதன் என்பதை என்றுமே மறவாதவன்.
அந்த தெருவிலேயே ,ஏன் அந்த ஊரிலேயே அனைவரும் விரும்பும் ஒரே ஆட்டோகாரன் மணி மட்டும்தான். சிறு குழந்தைகள் அவனை பாசமாக மணி மாமா என்றும் , வாலிப வயதுகாரர்கள் அண்ணா என்றும் , அவனைவிட வயதில் மூத்தோர் அவனை அன்பாய் ,”டேய் மணி “,என்றும் அழைப்பதுண்டு.
அவன் வீட்டில் நாலாவது பையன் இரண்டு அக்கா, ஒரு அண்ணனுக்கு அடுத்ததாக பிறந்தவன் . அவனுக்கு கீழே இரு தங்கைகள். அக்கா இருவரும் , அண்ணனும் பட்டப்படிப்பை முடித்து வேலை பார்க்கின்றனர் .. மணிக்குதான் ஏனோ தெரியவில்லை, படிப்பு மண்டையில் ஏறவில்லை .. தங்கைகள் இருவரில் மூத்தவள் கொஞ்சம் படிப்பாள் . தற்பொழுது பத்தாவது படித்துவருகிறாள், இளையவளும் மணி மாதிரி படிப்பே ஏறவில்லை. இந்த வருடம் எட்டாவது.
தனக்கு படிப்பு ஏறவில்லை என்றாலும் , தன்னை மாதிரி தன் தங்கைகள் கஷ்டப்படக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பவன்.
மூத்த தங்கையின் வகுப்பாசிரியர் , இவனது ஆட்டோவில் தினமும் பள்ளிக்கு பயணிப்பவர்.எனவே அவளை பற்றி தினமும் விசாரிப்பான். “அவ நல்லா படிச்சு பெரிய டாக்டர் ஆகனும் மா ,அவளை எப்படியாவது நான் நல்லா படிக்க வைக்கிறேன் . அவளை ஸ்கூல்ல நீங்க நல்லா பாத்துகோங்க மா” என வாரத்திற்கு மூன்று தடவையாவது அவளின் வகுப்பாசிரியரிடம் கூறுவது வழக்கம்.
அவளின் ஆசிரியரும் சிரித்தவாறே ,”ஆமாம் அவ நல்லாதான் படிக்கிறா பார்த்துக்கிறேன் மணி .. நீ கவலைப்படாதே “,என்பார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்கி வருகின்றன .. எனவே சிறப்பு வகுப்புகள் தினமும் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன..
வகுப்புகள் முடிந்து வழக்கமாக மாலை 6 30 மணிக்கு டீச்சருடன் சேர்த்து , அவன் தங்கையையும் அழைத்து வருவான் மணி.
கொஞ்ச நாட்களாகவே அவன் தங்கையின் நடவடிக்கைகளில் ஒரு மாற்றம் காணப்பட்டதை மணி உணர்ந்தான் .
அவளது தங்கை அடிக்கடி கண்ணாடி முன்னாடி நிற்பதும் தன் அழகை ரசிப்பதையும் பார்த்த அவன் “ போதும் போதும் சிங்காரிச்சது .. பரிட்சைக்கு படி போ போ ..” என விரட்ட .
தங்கையோ , என்ன கண்ணாடி முன்னாடி கூட பார்க்க எனக்கு உரிமையில்லையா ? ம் ஹூம் என முகவாய் கட்டையில் இடித்த வாரே அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
அன்று டீச்சரை அழைக்க வந்த மணியை நிறுத்தி, டீச்சர் கொஞ்சம் தயங்கியவாரே ..” மணி உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்பா” எனக்கூற.
மணிக்கோ நெஞ்சம் பதபதைத்தது.. மனசு படபடத்தது.. வாய் உலர்ந்த்து , நாக்கு ஒட்டி பேச்சே வரவில்லை .. கடவுளே ஏதாவது சொல்லப்போறாங்க என யோசித்தவாரே ஆட்டோவிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து “ மடமடவென சட்டை நனையும்படி முழு பாட்டிலையும் எடுத்து குடித்து வைத்தவன்,.” சொல்லுங்க மேம் என்றான் .
“இப்பெல்லாம் உன் தங்கையோட நடவடிக்கை சரியில்லைப்பா “
இந்த பள்ளியில பன்னிரண்டாவது படிக்கிற ஒரு பையனோடு அடிக்கடி பேசறதப்பார்க்குறேன் “ நானும் இரண்டு
மூன்று வாட்டி கண்டிச்சும் பார்த்துட்டேன் “ உன்கிட்ட சொல்லி எதற்கு டென்ஷன் ஆக்கனும்முன்னு உன் கிட்ட சொல்லலப்பா .. ஆனா நேற்று வகுப்பறையில அந்த பையனின் கையைபிடிச்சிட்டு இருந்ததை பார்த்து , கண்டிச்சுட்டுதான் உங்கிட்ட சொல்றேன் என்றார்.
ஒரு நிமிடம் மனசே விட்டுப்போனது மணிக்கு.. பாசத்தை பொழிந்தவனுக்கு இது பேரிடியாக இருந்தது. வீட்டிற்கு போகும் வழியில் டீச்சருடன் ஆட்டோவில் வந்த தங்கையை வெறித்து பார்த்தான் . சிறிது நேரம் சென்றவுடன் ஆட்டோவை நிறுத்தி தங்கையை அழைத்து “ இங்க பாருடா தங்கம் .. இந்த அண்ணன் உங்களுக்காகதான் பாடுபடுறேன் .. நீ டாக்டர் ஆயிட்டா உனக்கு மட்டுமல்லடா நம்ம குடும்பத்துக்கே பெருமை.
“ நான் என்ன ஏதுன்னு கேட்கல , ஆனா உனக்கு புரியுமுன்னு நினைக்கிறேன் .. சாதிக்க வேண்டிய வயசுல அம்மா ஆவதற்கு ஆசப்படாதம்மா.. இந்த வயசுல உன் பிரண்ட்ஸை தவிர மத்தவங்க எல்லாரும் உனக்கு எதிரியாதான் தெரியுவாங்க..
“ இந்த வயசுல நாம ரொம்ப கவனமா இருக்க வேண்டும் தங்கம்”
இந்த வயதில் வருவதற்கு பெயர் காதல் இல்ல கண்ணம்மா .. அது ஒருவிதமான இனக்கவர்ச்சி .. இயற்கையில இந்த வயதில் உள்ள அனைவருக்கும் வரக்கூடிய இயற்கையான நிகழ்வு .. இது மாதிரி வரலன்னா நாம மனுஷங்களே இல்ல .
உனக்கு 25 வயசுல வரும்பாரு அதுதாண்டா உண்மையான காதல் அது நிரந்தரமா இருக்கும் .. அப்போ மனதுல ஒரு பக்குவம் வரும். இவன் நம்மள வச்சு காப்பாத்துவானா? சரியானவனா அப்படின்னு முடிவெடுக்கமுடியும்.
அப்படி உனக்கு அந்த 25 வயசு வரப்ப, நீ விரும்பற அந்த பையன் தான் வேணும்முன்னு நீ சொல்லு .. அப்ப இந்த அண்ண உலகமே எதிர்த்தாலும் உன் பின்னாடி நின்னு முடிப்பேண்டா”
நான் காதலுக்கு ஒன்னும் எதிரி இல்லடாமா .காதல் தப்பே இல்ல ஆனா படிக்கிற வயசுல காதலிக்கிறதுதான் தப்பு “ என படிக்காத மேதை பேசிக்கொண்டே போக .. படித்த ஆசிரியர் வாயடைத்து போக .. தங்கையோ தலைகுனிந்து .. நிமிர்ந்தவளின் முகத்தில் மட்டுமல்ல மனதிலும் மாற்றம் …!
(ஆனந்தி ச, பட்டதாரி ஆசிரியர் ( ஆங்கிலம்), அ மே நி ப கண்டிகை, செங்கல்பட்டு மாவட்டம்)