Short Story: ஐந்து விளக்குகள், ஒரே வீடு!
- ச ஸ்ரீபிரியா
அப்பாவின் கனவு—ஐந்து மகள்களும் ஆசிரியர். மூத்தவர் வேதியியலை வேதமாகக் கற்று வேதியியல் ஆசிரியர்; இன்று தலைமையாசிரியர். குடும்பத்தை, அப்பாவை, தங்கைகளை—எல்லோரையும் சேர்த்து நடத்தும் தூண் அவள்.
அம்மா இறந்த பிறகு அந்த இடத்திலிருந்து எனக்கும் என் அண்ணனுக்கும் திருமணம் செய்து அம்மா இல்லாத குறையை நீக்கியவர்.இரண்டாமவர் கணித மேதை; போட்டியில் முதல்வளுடன் போட்டி போட்டு படிப்பிலும், வேலையிலும் சிறந்தவர்—கணித ஆசிரியர், இன்று தலைமையாசிரியர், எங்கள் வீட்டு ராமானுஜர். மூன்றாமவர் வெளிப்பணிகளை ஆண் போல் பார்ப்பவர், ஓடி ஓடி உழைப்பதால் தான் என்னவோ இவர் விளையாட்டு துறையை தேர்ந்தெடுத்தார் போலும்.
விளையாட்டில் ஆர்வம் அதிகம்.உடற்கல்வி ஆசிரியர். நான்காமவள் நான்—காவல்துறை கனவு நடக்காததால் அப்பாவின் ஆசையை ஏற்று, தமிழ் ஆசிரியர், உதவி தலைமையாசிரியர். இளையவள் வீட்டின் செல்லம், பெற்றோருக்கு மிகப் பிடித்தவள்; விடுதி காப்பாளினி. ஐந்து பெண்களும் பொறுப்பும் பாசமும் கொண்டு, ஒவ்வொரு பணியிலும் வீட்டையும் சமூகத்தையும் ஒளிரவைக்கிறார்கள்.
அப்பா கண்ட கனவு, நான் வாழும் பாதை
ஆசிரியர் ஆவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை—என் கனவு காவல்துறை அதிகாரி. சிறு வயதிலிருந்தே அநியாயத்தை தட்டிக்கேட்கும் எண்ணம்; அப்பாவிடம் சொன்னேன், அவரும் பயிற்சி ஏற்பாடு செய்து வழிநடத்தினார். அப்போது பண-பலம், ஆள்-பலம் பேசும் காலம்; திறமைக்கு மதிப்பு குறைவு. இருமுறை உடல்தகுதித் தேர்வில் தேர்வாகவில்லை—மனம் வலித்தாலும், உடையவில்லை.
அப்பாவின் ஆசை ஐந்து மகள்களையும் ஆசிரியராகப் பார்க்க வேண்டும் என்பது. என் ஆசை நடக்காததால், “அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும்” என முடிவு செய்தேன். அவர் தமிழ் ஆசிரியர்; சகோதரிகள் வேதியியல், கணிதம், உடற்கல்வி, ஆசிரியராக இருந்தார்கள்—நான் தமிழை தேர்வு செய்து தமிழ் ஆசிரியரானேன்.
இன்று மருத்துவர், காவல்துறை அதிகாரி, பொறியாளர், ஆட்சியர் என பலரை உருவாக்கும் ஆசிரியப் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகிறேன். காவல்துறை அதிகாரியாக இருந்தால் என் ஆசை மட்டும் நிறைவேறியிருக்கும்; ஆனால் அப்பா கண்ட கனவை நிறைவேற்றியதால் முழு குடும்பமும் மலர்ந்தது. நம் ஆசை நடக்காவிட்டால், பெற்றோரின் கனவைச் சுமப்பது பிள்ளையின் கடமை—அதுவே என் பாடம்.