இன்சொல் பேசுவோம்.. இதயம் என்றென்றும் இளமையாக வாழும்!
- கவிஞர் செ.வெண்ணிலா
இனிய சொற்களை பேசும் இதயம் என்றென்றும் இளமையாக வாழும். நாம் பேசும் சொற்கள் நல்ல சொற்கள் என்றால் அந்த சொற்களே நம்மை நிம்மதியான வாழ்க்கைக்கு அழைத்து செல்லும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.
என்ற குறளுக்கேற்ப இன்னாத சொற்களை நம் வாழ்க்கையெனும் அகராதியிலிருந்து அற்றுப் போக செய்ய வேண்டும். இன்னாத சொற்களை இல்லாமல் செய்து நம் வாழ்வை நாம் வளப்படுத்த வேண்டும்.
நாம் ஒவ்வொரு நாளும் விழித்தெழும் போது இன்று முழுவதும் நான் நல்ல சொற்களை மட்டுமே பேசவேண்டும் என உறுதியுடன் தொடங்க வேண்டும். கடவுள் நமக்கு கொடுத்த வரம் மறதி. எனவே தீய சொற்களை மறந்து விடுவது ஒரு அற்புதம்.
எண்ணத்தில் இன்சொல்
வார்த்தை வழியே தீயசொற்கள் வருவதை தடுக்க ஒரே வழி நம் எண்ணத்தை இன் சொல்லால் நிரப்புவதே ஆகும். நல்ல எண்ணத்தை அனைவரும் சுமந்திருந்தால் போதும் அனைத்தும் நமதாகி விடும். நட்பு நமதாகும். நாணயம் நமதாகும். உறவுகள் நமதாகும். ஊக்கம் நமதாகும். ஏன் இந்த உலகமே நமதாகும்.
நட்பு என்பது எண்ணம் செயல் வார்த்தை என்ற பரிணாமங்களில் வாழ்கிறது. வார்த்தையால் விலகிய எத்தனையோ நட்பை பார்த்திருப்போம். ஏன் நமது வாழ்விலும் அது நடந்திருக்கும். அதை எண்ணி எண்ணி நாம் வருந்தியும் இருப்போம். நட்பு என்ற அற்புதமான உறவு நிலைத்திருக்க இன்சொல்லே எப்போதும் துணையிலிருக்கும்.
உறவுகள் வாழும்
நம்மைச்சுற்றி உள்ள உறவுகள் நம்மால் மகிழ்ச்சி அடைந்தால் நம்மைச்சுற்றியே இருப்பர். அவ்வாறு மகிழ்ச்சியை தருவது அவர்களிடம் நாம் பேசும் இன்சொல் மட்டுமே. கோடி கொடுத்து வாழ வேண்டாம். கோவிக்காமல் பேசினால் போதும். உறவுகள் எப்போதும் நம்முடன் வாழும். தெரிந்தவர் தெரியாதவர் பழகியவர் பழக்காதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் இனிமையான சொல்லை மட்டும் பேசினால் போதும். உலகமே நமக்கு உறவுகள் ஆகும்.
நாம் செய்யும் பணியாகட்டும், பணிபுரியும் இடம் ஆகட்டும் அங்கு நாம் இனிய சொற்களைப் பேசி வந்தால் நம் பணி சிறப்பாக அமையும். பணிக்கான ஒத்துழைப்பும் பாராட்டும் நிறைவாகக் கிடைக்கும். பணியும் நிறைவாகவும் சரியாகவும் அமையும். நிம்மதியை வழங்கக்கூடியதாய் இருக்கும். நாம் செய்கின்ற பணி யாராலும் குறைகூற முடியாமல் பலம் வாய்ந்ததாக அமையும்.
வாய்ப்புகள் அமையும்
நம் வாழ்வில் பல வாய்ப்புகள் வரும். அந்த வாய்ப்புகளை நாம் சரியான முறையில் அணுக வேண்டும். அதற்கு இன்சொல் மிகவும் இன்றியமையாதது. நாம் பேசக்கூடிய அந்த வாய்ப்புகளை நமக்கானதாக மாற்றும். எளிமையான முறையில் அந்த வாய்ப்புகளை நம் இன்சொல்லால் கையாளலாம்.
கற்க கசடற இன்சொல்லை கற்றபின்
பேசுக எல்லோரிடத்தும். - என்ற இந்த மாற்றுத் திருக்குறளுக்கேற்ப
எண்ணுவோம் இன்சொல்
வாழ்வோம் இன்சொலால்
வெல்வோம் இன்சொல்லோடு.
(கவிஞர் செ வெண்ணிலா B.Sc .,M.A., B.Ed. இடைநிலை ஆசிரியர். ஆவடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, ஆவடி)