சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஆன்லைன் முன்பதிவில் புதிய கட்டுப்பாடு

Su.tha Arivalagan
Nov 23, 2026,01:45 PM IST

பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், புனித நதியான பம்பையின் தூய்மையைப் பாதுகாக்கவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் கேரள அரசு ஆகியவை முக்கிய புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. 


சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 17ம் தேதி துவங்கி மண்டல பூஜை கால நடைபெற்று வருகிறது. சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை தரிசனத்திற்கு 10 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு பல வசதிகளை செய்து வருகிறது. இந்நிலையில் பக்தர்களுக்காக புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.  


ஆன்லைன் முன்பதிவில் மறுவாய்ப்பு இல்லை:




சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்குத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அதன்படி, ஆன்லைனில் தரிசனத்திற்காக முன்பதிவு செய்து விட்டு, குறிப்பிட்ட நாளில் செல்லத் தவறும் பக்தர்கள் மீண்டும் முன்பதிவு செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்துவிட்டு வராமல் இருப்பதால், உண்மையிலேயே தரிசனம் செய்ய விரும்பும் மற்ற பக்தர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசலை முறையாக ஒழுங்குபடுத்தவும் இந்த 'மறுவாய்ப்பு இல்லை' என்ற அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் தங்களது பயணத் திட்டத்தைத் துல்லியமாக உறுதி செய்த பின்னரே ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.   


பம்பை நதியில் கழிவுகளைக் கொட்டினால் அபராதம்:


மற்றொருபுறம், சபரிமலை யாத்திரையின் முக்கிய அங்கமான பம்பை நதியில் நீராடும் பக்தர்களுக்கும் கேரள அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. பம்பை நதியில் நீராடும் பக்தர்கள் தங்களது ஆடைகளை ஆற்றில் வீசினாலோ அல்லது கழிவுகளைக் கொட்டினாலோ அவர்களுக்கு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பம்பை நதி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள், திடக்கழிவுகள் மற்றும் மட்கும் கழிவுகளைக் கொட்டுவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 


பம்பை நதி மாசுபடுவதைத் தடுக்கவும், சுகாதாரச் சீர்கேடுகளால் பக்தர்களுக்குத் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கேரள அரசு இந்தக் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் தரிசன முன்பதிவு விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதோடு, பம்பை நதியின் புனிதத்தையும் தூய்மையையும் காக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விதிகளை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.