சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம்...ஏற்பாடுகள் தயார்
பத்தினம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரசங்கராந்தி தினமான நாளை (ஜனவரி 14) மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. பொன்னம்பலமேட்டில் தெரியும் மகரஜோதி தரிசனத்தை காண ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். சரண கோஷம் முழங்க பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 16ம் தேதி காலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு ஐயப்ப சீசன் துவ்ஙகியது முதலே மிக அதிக அளவிலான பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடத்தப்பட்டு, அன்று இரவே நடை சாத்தப்பட்டது. பிறகு மகரவிளக்க உற்சவத்திற்காக டிசம்பர் 30ம் தேதியன்று மாலை மீண்டும் கோவில் நடைதிறக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு சபரிமலையில் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கையும், பிரசாத விற்பனை மூலம் கோவிலுக்கு கிடைத்துள்ள வருமானமும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் ஆண்டு முழுவதும் தவக்கோலத்தில் இருப்பதாக ஐதீகம். தவக்கோலத்தில் இருக்கும் ஐயப்பன், வருடத்திற்கு ஒருமுறை பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சி தருவதாக ஐதீகம். இதை உண்மை என மெய்ப்பிக்கும் விதமாக நடைபெறுவதே மகரஜோதி தரிசனம் ஆகும். மகரவிளக்கு உற்சவம் நடைபெறும் ஜனவரி 14ம் தேதி பகல் 02.45 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மாலை 3 மணி முதல் மகரசங்கராந்தி பூஜைகள் நடைபெறும். ஜனவரி 12ம் தேதியன்று பந்தள அரண்மனையில் இருந்து புறப்பட்ட, ஐயப்பனின் தங்க நகைகள், வைர வாள் உள்ளிட்ட ஆபரணங்கள் அடங்கிய திருவாபரணப் பெட்டி ஜனவரி 14ம் தேதி மாலை 06.15 மணியளவில் சன்னிதானத்தை வந்தடையும்.
அந்த ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடத்தப்படும். தீபாராதனை முடிந்த சில நொடிகளிலேயே பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவமாக ஐயன் காட்சி தரும் மகரஜோதி தரிசனம் நடைபெறும். அதற்கு பிறகு ஜனவரி 19ம் தேதி இரவு வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 20ம் தேதியன்று காலையில் நடைபெறும் பூஜையில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பந்தள அரண்மனை பிரதிநிதிகள், தந்திரி முன்னிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டு, சாவி ஒப்படைக்கப்பட்டு விடும். மீண்டும் மாசி மாத உற்சவத்திற்காக பிப்ரவரி 12ம் தேதியன்று தான் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.
மகரஜோதி தரிசனம் காண வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கூடுதலாக 120 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து மட்டுமே மகரஜோதியை காண வேண்டும் என்றும், உயரமான மரங்களில் ஏறியோ அல்லது வனப்பகுதிக்குள் சென்றோ தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.