சபரிமலை பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீடு: எல்.ஐ.சி உடன் தேவஸ்வம் போர்டு ஒப்பந்தம்!

Su.tha Arivalagan
Nov 21, 2026,12:17 PM IST

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை யாத்திரை காலம் தொடங்கவுள்ள நிலையில், பக்தர்களின் நலன் கருதி முதன்முறையாக ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு (TDB) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் (LIC) இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


காப்பீட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :


திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேவஸ்வம் போர்டு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் கே. ஜெயக்குமார் இத்தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறுகையில், "சபரிமலை யாத்திரையின் போது எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பங்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விபத்துக் காப்பீடு மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும்" என்றார்.




இத்திட்டத்திற்கான முழுப் பிரீமியம் தொகையையும் பக்தர்களிடம் வசூலிக்காமல், தேவஸ்வம் போர்டின் நலநிதியில் (Welfare Fund) இருந்து செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பு யாத்திரை காலத்தில் காப்பீட்டுப் பிரீமியத்திற்காகச் சுமார் ரூ.1 கோடி வரை தேவஸ்வம் போர்டு செலவிடத் திட்டமிட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்காக 'விர்ச்சுவல் கியூ' (Virtual Queue) முன்பதிவு செய்யும் போதே, அவர்களின் வாரிசுதாரர் (Nominee) பெயர் மற்றும் உறவுமுறை குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அரவணை பிரசாத உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம்:


41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜை காலத்தில் அரவணை பிரசாதத்திற்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தினசரி 2 லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள உற்பத்தி ஆலையும் செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதன் மூலம் யாத்திரை தொடங்குவதற்கு முன்பாகவே 50 லட்சம் முதல் 60 லட்சம் டின் அரவணை பிரசாதத்தைக் கையிருப்பில் (Buffer Stock) வைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.


டிஜிட்டல் மயமாக்கல் திட்டம்:


சபரிமலையில் செயல்படுத்தப்படவுள்ள டிஜிட்டல் மயமாக்கல் (Digitisation) திட்டத்தை தேவஸ்வம் போர்டு நேரடியாக முன்னெடுக்கவுள்ளது. இத்திட்டத்தில் கேரள அரசின் தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (KINFRA) பங்களிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், திட்டம் எவ்விதத் தடையுமின்றித் துல்லியமாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கே.ஜெயக்குமார் தெரிவித்தார்.