மகர விளக்கு பூஜைக்காக.. சபரிமலையில் இன்று மாலை நடை திறப்பு

Su.tha Arivalagan
Dec 30, 2025,03:38 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு  வருடம் 20 25 டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மார்கழி 15- ஆம் நாள் மகர விளக்கு கால பூஜைகளுக்கு சபரிமலை நடைதிறப்பு இன்று மாலை நடைபெறுகிறது.


சாந்தி பிரசாத் நம்பூதிரி அவர்கள் இன்று மாலை 5:00 மணிக்கு மேல் சபரிமலை நடை திறந்து தீபம் ஏற்றுவார். அதனை தொடர்ந்து சன்னிதானத்தில் உள்ள அணையாத விளக்கு ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் 18-ம் படி ஏறி சுவாமி ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.   வேறு பூஜைகள் எதுவும் இன்று இல்லை எனவும், இரவு 11 :00மணிக்கு நடை அடைக்கப்படும்.




டிசம்பர் 31ஆம் தேதி மார்கழி மாதம் 16ஆம் நாள் புதன்கிழமை அதிகாலை 3:00 மணிக்கு சபரிமலை நடை திறந்ததும் தந்திரி கண்டரரு  மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி அவர்கள் சபரிமலை சாஸ்தா ஐயப்பன் விக்ரகத்தில்  அபிஷேகம் நடத்தி நெய் அபிஷேகத்தை துவங்கி வைப்பார்.


புத்தாண்டு 20 26 துவங்கி ஜனவரி 14-ம் தேதி, புதன்கிழமை மகர ஜோதி தரிசனம் சபரிமலையில் நடைபெற உள்ளது. அன்றைய நாள் மாலை 6:25 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணம் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதனைத் தொடர்ந்து மகரஜோதி தரிசனம் சன்னிதானத்தில் நடைபெற உள்ளது.


மகர விளக்கு பூஜை யாத்திரையை முன்னிட்டு சபரிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் துப்புரவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நீலி மலைவாயில் முதல் சபரி பீடம் வரையிலான பகுதி,பம்பை நதிக்கரை மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன.


மகரஜோதி சீசனை ஒட்டி ஜனவரி மாதம்  19 ஆம் தேதி வரை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் ஜனவரி 20ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 6:30 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனம் செய்வார். பிறகு சபரிமலை நடை அடைக்கப்படும். இத்துடன் 20 25 - 20 26 மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவு பெறுகிறது.


லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்ப தரிசனம் பெறுவதற்காக சரண  கோஷமிட்டு  சபரிமலை பயணம் தொடர உள்ளனர். அனைவருக்கும் சபரிமலை ஐயப்பன் அனைத்து வளங்களும் நலங்களும் அளித்து அருள் பாலிப்பார்.


மேலும் இது போன்ற சுவாரசியமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.