மண்டல மகர விளக்குப் பூஜைக்காக. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடைதிறப்பு

Su.tha Arivalagan
Nov 15, 2025,03:49 PM IST

பத்தனம்திட்டா : கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2025ம் ஆண்டிற்கான மண்டல-மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதியான நாளை நடைதிறக்கப்பட உள்ளது. இதனால் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யவும், மாலை அணிந்து மண்டல விரதம் கடைபிடிக்கவும் ஐயப்ப பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.


சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் மாதப்பிறப்பின் போது, மாதாந்திர பூஜைகளின் போது மட்டுமே 5 நாட்கள் திறந்திருக்கும். மற்றபடி வருடத்தின் அனைத்து நாட்களும் மூடப்பட்டிருக்கும். சபரிமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் தேதி துவங்கி, தை மாதம் முதல் வாரம் வரை மண்டல மகரவிளக்கு பூஜைகள் நடத்தப்படும். இந்த காலத்தில் மட்டுமே அதிகபட்சமாக 61 நாட்கள் தொடர்ந்து திறந்திருக்கும். இந்த சமயத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, இருமுடி சுமந்து வந்து, சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம்.


இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதியான நாளை மாலை 5 மணி அளவில் கோவில் நடை திறக்கப்படும். சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிறகு ஹரிவராசனம் பாடி, இரவில் மீண்டும் நடை அடைக்கப்பட்டு விடும். கார்த்திகை முதல் தேதியான நவம்பர் 17ம் தேதி அன்று அதிகாலை 03.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் 17ம் தேதி துவங்கி, டிசம்பர் 27ம் தேதி வரை மண்டல பூஜை நடைபெறும். டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜைக்கு பிறகு மீண்டும் கோவில் நடை அடைக்கப்படும்.




அதற்கு பிறகு டிசம்பர் 30ம் தேதியன்று மகரவிளக்கு உற்சவத்திற்காக மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். 2026ம் ஆண்டு மகர சங்கராந்தியான ஜனவரி 14ம் தேதியன்று மகரஜோதி தரிசனம் நடைபெறும். மகரஜோதி அன்று சுவாமி ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக பந்தளம் அரண்மனையில் இருந்து ஜனவரி முதல் வாரத்திலேயே திருவாபரணப் பெட்டி ஊர்வலமாக எடுத்து வரும் உற்சவம் துவங்கி விடும். மகரஜோதி தரிசனம் நிறைவடைந்த பிறகு ஜனவரி 20ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோவில் திறந்து இருக்கும். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு பிறகு மீண்டும் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மாசி மாத பிறப்பின் போதே நடைதிறக்கப்படும்.


இந்த ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் ஆன்லைனில் கண்டிப்பாக முன்பதிவு செய்திருக்க வேண்டும் என கேரள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்த ஆண்டு மண்டல-மகரவிளக்கு பூஜையின் போது ஆன்லைன் மூலமாக பதிவு செய்து வரும் பக்தர்கள் 70,000 பேரும், நேரடியாக சபரிமலைக்கு வந்து ஸ்பாட் புக்கிங் செய்து வரும் பக்தர்கள் 20,000 பேரும் மட்டுமே தினசரி சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. ஸ்பாட் புக்கிங் செய்வதற்கான கவுன்ட்டர்கள் வண்டிபெரியாறு, நிலக்கல், பம்பா, எரிமேலி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.