சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்.. தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் வருகை!

Su.tha Arivalagan
Nov 19, 2025,01:58 PM IST

- கலைவாணி கோபால்


சபரிமலை:  கேரள மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சீசன் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இதையடுத்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு அழைக்கப்பட்டு முகாமிட்டுள்ளனர்.


கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.  சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் வகையாக பக்தர்கள் இந்த ஆண்டு அதிக முறையில் கலந்து கொண்டு இருப்பதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.  இந்த சூழலில் அங்குள்ள பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.




குறைந்தபட்சம் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றதால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை என்று கேரளா அரசு அறிவித்துள்ளது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி ஐயப்ப பெண் பக்தர் ஒருவரும் பலி ஆகி உள்ளார் என்பது  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் கேரளா அரசு அவசர காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் தேசிய பேரிடர் மீட்பு குழுவை அழைத்துள்ளது. பக்தர்களுக்கு தேவையான அவசரத்  தேவையை பூர்த்தி செய்யும் விதமாக இவர்கள் பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.


கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் சமயத்தில் பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இவர்கள் பாதுகாப்புப் பணியில் துணை நிற்பார்கள்.


(கலைவாணி கோபால், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)