சொல்லும் முன் அறிந்து சொல்!

Su.tha Arivalagan
Apr 09, 2026,12:54 PM IST

- கவிஞர் சகாய தேவி


சொல் எனப்படுவது சொல்லுதல் எனும் விந்தையான வித்தைக்காரன்.. 

சொல் இனிய மயிலிறகாய் 

சில நேரங்களில் 

மனதை  வருடி செல்லும்!

சொல் இராவு பூதமாய் 

சில நேரங்களில்

நிம்மதியை திருடி செல்லும்!


சில நேரங்களில் 

ஆறாத காயங்களை 

ஓயாத அலைகள் போல 

ஏற்படுத்தி செல்லும் அசுரன்!


தீராத உற்சாகங்களை 

உதயமாகும் சூரியனைப் போல 

உதிரத்திற்குள் எழுப்பி செல்லும் 

அற்புத வித்தைக்காரன் அவன்!




நிலவினும் குளிர்ச்சொல் கொஞ்சி 

எப்பொழுதும் பேசிட இயலுமோ? 

நிழலிலும்  சூரியனாக சுட்டெரிக்கவும் தெரிந்திட வேண்டுமே


கயவனின் கண்கள் காண்கையில் கருணையாய் பேசுதலை விட 

கனலாய் சீறுவதே நன் நெறி  .. 

அநீதியை கண்டு பாரதியைப் போல் 

அக்கறையோடு புரட்சிகள் பேசிட 

புது பாரதிகள் புவியினில் வேண்டுமே ...


குடும்பத்திலும் கால சூழ்நிலை மனம் அறிந்து கதைக்க வேண்டுமே...  

உறவுகள் இனித்திட 

இட்லியோடு சேரும் சட்னியாய் 

இனிய சொற்கள் சேர்த்திடு அனுதினமே ..


யோசித்து பின் யோசித்து சொற்களைக் கொட்டிய பின் 

மனம் கலங்குவதை விட 

சொற்களை சிதற விடும் முன் சிந்தித்து சொல்லலாமே...


யாதும் ஊரே யாவரும் கேளிர் 

அறிந்தவனிடமும் அறியாதவனிடமும் 

அன்பை அனுசரணையை சுமக்கும் சொற்களை 

பரிசாய் அனுப்பலாமே .. 


நற்சொல் நல்லன  மட்டும் பேசுவதல்ல 

நன்கு சிந்தித்த பின் பேசுதலுமாகுமே


(கவிஞர் சகாய தேவி  சகாய சாரல்கள், சென்னை)