Sai Jadhav.. 4வது தலைமுறையாக ராணுவ உடை அணியும் பெண்.. தொடரும் இந்திய பெண்களின் சாதனை!

Su.tha Arivalagan
Dec 16, 2025,03:26 PM IST

- க.சுமதி


டெல்லி: புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார் சாய் ஜாதவ்.  23 வயதான சாய் ஜாதவ்,  தனது குடும்பத்தில் 4வது தலைமுறையாக ராணுவ சீருடையை அணிபவர் என்ற பெருமையைப் பெற்று புதிய வரலாறு படைத்துள்ளார்.


93 ஆண்டு வரலாற்றில் முதல் முறையாக ராணுவ அகாடமியில் தேர்ச்சி பெறும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்று அசத்தியுள்ளார் சாய் ஜாதவ். மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்தவர் சாய் ஜாதவ்.


உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய ராணுவ அகாடமி (NDA)செயல்பட்டு வருகிறது. இந்த இந்திய இராணுவ கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் 1932இல் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த அகடமியில் இதுவரை 67,000 பேர் பட்டம் பெற்று ராணுவத்தில் சேர்ந்துள்ளனர்.


ஆனால் இந்த அகடமியில் இதுவரை பெண்கள் யாரும் சேர்ந்து பட்டம் பெற்றதில்லை. அந்த தடையை உடைத்து  NDA பட்டம் பெற்ற முதல் பெண் அதிகாரி என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் சாய் ஜாதவ்.


நான்காவது தலைமுறை




அது மட்டுமல்லாமல் ஜாதவ் குடும்பத்திற்கும் ஒரு புதிய பெருமையை சேர்த்துள்ளார். அவரது குடும்பத்தில் ராணுவ சீருடை அணியும் நான்காவது தலைமுறை உறுப்பினராக சாய் ஜாதவ் திகழ்கிறார். அவரது கொள்ளு தாத்தா பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றினார். அவரது தாத்தா இந்திய ராணுவத்தில் பணியாற்றினார்.


சாய் ஜாதவின் தந்தை சந்திப் ஜாதவ் இன்றும் தொடர்ந்து இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகிறார். சாய் ஜாதவின் சாதனை இந்திய ராணுவத்தில் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டி உள்ளது.


சாய் ஜாதவ் பணி


பயிற்சியை வெற்றிகரமாக முடித்த சாய் ஜாதவ் ராணுவத்தில் லெப்டினென்ட் ஆக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இராணுவ அதிகாரி சாய் ஜாதவ்  இளம் பெண்களுக்கு சிறந்த ரோல் மாடலாக இருப்பார் என்பதில் ஐயமில்லை.

 

ராணுவ அதிகாரியாக பதவி ஏற்றுள்ள சாய் ஜாதவிற்கு நண்பர்கள் உறவினர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


(க.சுமதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)