காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!

Su.tha Arivalagan
Jul 14, 2025,03:54 PM IST

டெல்லி: ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது காதல் கணவர் காஷ்யப் பரூபள்ளியிடம் இருந்து பிரிந்துள்ளதாக அறிவித்துளஅளார்.


2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவர் சாய்னா. காதலித்து மணம் புரிந்த சாய்னா தற்போது தனது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறுகையில், சில நேரங்களில் வாழ்க்கை நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் செல்கிறது. நிறைய யோசனை மற்றும் பரிசீலனைக்குப் பிறகு, காஷ்யப் பரூபள்ளி மற்றும் நான் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். ஒருவருக்கொருவர் அமைதி, வளர்ச்சியை கருத்தில் கொண்டு இதைத் தேர்வு செய்துள்ளோம். நினைவுகளுக்கு நன்றி. எதிர்காலத்திற்கு அனைத்தும் சிறப்பாக அமைய விரும்புகிறேன். இந்த நேரத்தில் எங்கள் தனிப்பட்ட விஷயத்தைப் புரிந்துகொண்டு மதித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.


சாய்னா நேவால் மற்றும் பரூபள்ளி காஷ்யப் ஆகியோர் 2018 இல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஹைதராபாத்தில் உள்ள புல்லேலா கோபிசந்த் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். சாய்னா தனது சிறந்த ஆட்டத்தாலும் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றதாலும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். அதே சமயம், பரூபள்ளி 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று தனக்கென ஒரு பெயரைப் பெற்றார்.




கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு ஒலிம்பிக் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய பெண் சாய்னா ஆவார். 2015 இல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்த முதல் இந்திய பெண் சாய்னா ஆனார். பரூபள்ளி இதுவரை தனது தரப்பிலிருந்து இந்த பிரிவினை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.


2024 ஆம் ஆண்டில், சாய்னா தான் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது பேட்மிண்டன் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். "முழங்கால் அவ்வளவு நன்றாக இல்லை. எனக்கு கீல்வாதம் உள்ளது. என் குருத்தெலும்பு மோசமான நிலையில் உள்ளது. எட்டு முதல் ஒன்பது மணி நேரம் பயிற்சி செய்வது மிகவும் கடினம்," என்று ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் வீரரும், பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் செஃப்-டி-மிஷனாக இருந்தவருமான ககன் நாரங் தொகுத்து வழங்கிய 'ஹவுஸ் ஆஃப் க்ளோரி' பாட்காஸ்டில் நேவால் கூறியிருந்தார்.