முத்துமலை முருகன் கோவில்.. தமிழ்நாட்டில் முருகனுக்கான முத்திரைக் கோவில்களில் ஒன்று!
- ஸ்வர்ணலட்சுமி
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி அடுத்த ஏத்தாப்பூர் பகுதியில், புத்திர கவுண்டன்பாளையம் புறநகர் பகுதியில் அமையப்பெற்றுள்ள உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. முருகன் சிலையின் உயரம் 111 அடி ஆகும். பீடம் 35 அடி உயரம். மொத்தம் 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை இங்கு அமையப்பெற்றுள்ளது சேலம் மாவட்டத்திற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
கோயிலின் மூலவர் சுப்பிரமணியர். ஆண்டுதோறும் சூரசம்காரம் நிகழ்வு இக்கோவிலில் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பிரம்மாண்டமான முருகன் சிலை அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கி, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் மண்ணை எடுத்து வந்து இந்த திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலின் நிறுவனர் ஸ்ரீதர் அவர்கள் ஆவார். மலேசியாவில் உள்ள முருகனைப் போன்று தமிழகத்தில் அதுவும் சேலத்தில் அதேபோன்று கோவில் அமைய வேண்டும் என்பது எனது தந்தையின் கனவு என்றும் அந்த கனவு தற்போது நிறைவேறி உள்ளது என்று ஸ்ரீதர் அவர்கள் தெரிவித்தார். மலேசியாவில் உள்ள முருகன் கோயில் வடிவமைத்த தியாகராஜர் ஸ்தபதி மூலம் இந்த கோயில் கட்டப்பட்டது.
சில புராணங்களின்படி இந்த தளம் முத்து என்ற முனிவர் தியானம் செய்த இடமாகும். அவர் முன் முருகன் தோன்றியதால் முத்துமலை என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள முருகன் சிலையின் அமைப்பு வசீகரமான சிறப்புடன் வலது கையில் அபய முத்திரையுடனும், இடது கையில் வேலுடனும் காட்சியளிப்பார். காணவே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். முருகனை பார்க்க பார்க்க பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும்.
சுமார் மூன்று கோடி ரூபாய் செலவில் 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட முருகன் சிலை அருகில் ஒரு லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் பக்தர்கள் கட்டணம் செலுத்தி மேலே ஏறி வந்து முருகன் கையில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்யலாம். மலேசியாவில் அமைந்துள்ள முருகன் சிலை 140 அடி உயரத்தில் அமைந்திருக்கும். ஆனால் சேலத்தில் உள்ள முத்து மலை முருகன் சிலை 146 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயர்ந்த முருகன் சிலை என்ற சாதனை படைத்துள்ளது.
கோவில் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை முத்துமலை முருகன் தரிசனம் காணலாம். மேலும் திருவிழா நாட்களில் தரிசனத்திற்காக நேரம் நீட்டிக்க படுகிறது. முத்து மலைமுருகன் கோவிலில் பல்வேறு சடங்குகள் மற்றும் திருவிழாக்கள் கோலாகலமாக நடைபெறுகிறது. "ஸ்கந்த ஷஷ்டி 'இங்கு ஒரு முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. முருக பக்தர்கள் பல்வேறு நகரங்களில் இருந்தும், நாடுகளிலிருந்தும் திரளாக வந்து முருகன் அருளை பெற்று செல்கின்றனர்.
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.