நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன்... மகனை நினைத்து பொதுக்குழு மேடையில் அழுத ராமதாஸ்!
சேலம்: நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன். சேலத்தில் நடந்த பொதுக்குழு மேடையில் மகனை நினைத்து அழுத பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
ராமதாஸ் தலைமையில் சேலத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை பாமக செயல் தலைவராக தேர்வு செய்து ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி பசுமை தாயகம் தலைவர் பதவியில் இருந்து சௌமியா அன்புமணி நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர் பாமக நிறுவர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், என் மார்பில் அன்புமணி ஈட்டியால் குத்துவது போல் குத்துகிறார். அன்புமணியைப் நான் சரியாக வளர்க்கவில்லை. ஒரு கும்பல் என்னையும் கௌரவ தலைவர் ஜிகே மணியையும் துறத்துகின்றனர். அன்புமணி சில்லறை பசங்களை வைத்து என்னை அவமானப்படுத்துகிறார். 95 சதவீத பாட்டாளி மக்கள் என் பின்னால்தான் இருக்கிறார்கள். அன்புமணியின் பின்னால் 5% பெயர்தான் உள்ளனர். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அன்புமணிக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்.
யாருடன் கூட்டணி வைக்கலாம் என சிலரிடம் நான் கருத்துக்களை கேட்டு வருகிறேன். நான் அறிவிக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும். மேலும் நான் நினைப்பது நிச்சயமாக நடக்கும் சூழல் இந்த நேரத்தில் வந்திருக்கிறது. நான் அன்புமணிக்கு என்ன குறை வைத்தேன். எம்பிபிஎஸ் படிக்க வைத்தேன். மத்திய அமைச்சராக்கினேன், மாநிலங்களவை எம்பியும் ஆக்கினேன். நான் நினைத்திருந்தால் பெரிய பதவிகளை வகித்திருப்பேன். ஆனால் அதை செய்யவில்லை. அன்புமணிக்கு காலம் பதில் சொல்லும், அன்புமணியை நினைத்தால் தூக்க மாத்திரை போட்டாலும் தூக்க வரமாட்டேங்குது. ஆனால், பாட்டாளி சொந்தங்களை நினைத்தால் எனக்கு புத்துணர்ச்சி வருகிறது.