சேலம் வந்தார் தவெக தலைவர் விஜய்... உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்!
சேலம்: மேலம் வந்த தவெக தலைவர் விஜயை உற்சாகத்துடன் அக்கட்சி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை விஜய் நடத்தி வருகிறார். கடந்த 2ஆம் தேதி பனையூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டு பேசினார்.
இதனையடுத்து இன்று சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு தினங்களாகவே தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்திற்கான பணிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோர் செய்து வந்தனர். அவர்கள் மாநகர காவல்துறையினரும், திடலில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள ஊத்துமலையின் மீது யாரும் ஏறக்கூடாது என்பதற்காக அந்த மலையை சுற்றிலும் உறுதியான தடுப்புகள் அமைத்தும், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தவெக தலைவர் விஜய் சென்னையில் இருந்து இன்று காலை 10:45 மணிக்கு புறப்பட்டு, காலை 11:30 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் கூட்டம் நடக்கும் சீலநாயக்கன்பட்டி மைதானத்திற்கு விஜய் வருகிறார். அதன்பின் மதியம் 12:00 மணி முதல் 3:00 மணிக்குள் கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில், தவெக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று சேலத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு வர 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விஜய் சேலம் வந்தடைந்தபோது, மாவட்ட எல்லை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர் தூவியும், பட்டாசு வெடித்தும், கட்சிப் பாடல்களைப் பாடியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைகளுக்காக இந்த வருகை அமைந்ததாகக் கூறப்படுகிறது. தொண்டர்களின் வருகை அதிகமாக இருந்ததால், சேலத்தின் முக்கிய சாலைகளில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.