சமையல் With ஸ்வர்ணா: கருப்பு உளுந்து (Black urad dal ) + மல்லி சட்னி!
- ஸ்வர்ணலட்சுமி
தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு என்னுடைய "சமையல் வித் ஸ்வர்ணா " எனும் தலைப்பில் என்னுடைய சமையல் குறிப்புகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நான் நேற்று கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் வேளையில் என் எதிரே எங்கள் வீதியில் குடியிருக்கும் ரேகாவும், அவளது மகள் சுசியும்( ஒன்பதாம் வகுப்பு படிக்கும்) வருவதைக் கண்டு அவர்களுடன் பேச்சு கொடுத்தேன்.
சுசி சிலம்பம் வகுப்பிலிருந்து வந்து கொண்டிருந்ததை அறிந்து, என்ன சுசி சிலம்பம் கிளாஸ் எப்படி செல்கிறது என்று கேட்டேன். அதற்கு அவள் மிகவும் நன்றாக போகிறது ஆன்ட்டி என்று கூறினாள்.
அதற்கு அவள் அம்மா ரேகா கூறுகையில், ஆமா, அக்கா கிளாஸ் இப்பொழுதுதான் முடிந்தது. ஆனால்,சுசி மிகவும் டயர்ட் ஆகி விடுகிறாள். உடல் சோர்வடைந்து விடுகிறாள். திரும்பவும் வீட்டிற்குச் சென்று அவளால் படிக்க இயலவில்லை. அதனால் டாக்டர் அவளுக்கு நல்ல சத்தான உணவுகளை சமைத்துக் கொடுக்கவும் என்று அறிவுறுத்தினார். நானும் எல்லா பழ வகைகளும் நட்ஸ் எல்லாம் கொடுக்கிறேன் அக்கா என்று ரேகா கூறினாள். வேறு ஏதாவது சத்தான உணவுகள் உங்களுக்கு தெரிந்த டிப்ஸ் இருந்தால் கூறுங்கள் அக்கா என்று கேட்டாள்.
உடனே நான் என் வீட்டில் இப்போது செய்துவிட்டு வந்த சட்னி எடுத்துச் சென்று அவளுக்கு டேஸ்ட் செய்ய கொடுத்தேன். என்ன சட்னி ஆன்ட்டி என்று கேட்டாள். கருப்பு உளுந்து &மல்லி சட்னி என்று கூறினேன். கருப்பு உளுந்தா!என்று ஆச்சரியமாக பார்த்துவிட்டு உடனே ரேகாவும், சுசியும் அதனை டேஸ்ட் செய்துவிட்டு ஆன்ட்டி மிகவும் நன்றாக இருக்கிறது. எப்படி? செய்தீர்கள் என்று கேட்டனர். உடனே நான் நான் செய்முறையை கூறினேன்.
நான் செய்த கருப்பு உளுந்து &மல்லிச் சட்னி செய்முறைக் குறிப்பு இதோ உங்களுக்காகவும்!
தேவையான பொருட்கள்:
1. முழு கருப்பு உளுந்து - 4 ஸ்பூன்.
2. கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்.
3 . வர மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப).
4. புளி - சிறிதளவு.
5. சீரகம் -1/2 ஸ்பூன்.
6. தேங்காய் துருவல் - 1 கப்.
7. மல்லித்தழை நன்றாக கழுவி கிளீன் செய்தது ஒரு கப். (ஒரு சிறிய கட்டு).
8. உப்பு தேவைக்கு ஏற்ப.
9. நல்லெண்ணெய் 3 ஸ்பூன்.தாளிக்க ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் கறிவேப்பிலை.
10. பெருங்காயம் - 1/4 ஸ்பூன்.
11. பூண்டு உரித்தது - 6 பல்.
செய்முறை:
1. ஒரு கனமான வாணலியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடு ஏறியதும் முழு கருப்பு உளுந்தை போட்டு நன்றாக வறுக்கவும்.
2. கடலை பருப்பு சேர்க்கவும். கடலைப்பருப்பு வறுபட்டதும் பூண்டு, வர மிளகாய், பெருங்காயத்தூள், சீரகம் , புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. அடுப்பை அணைத்துவிட்டு அதில் ஒரு கப் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
4. மல்லித்தழை (கட் செய்தது ) சேர்த்து அந்த சூட்டிலேயே நன்றாக வதக்கவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
5. பிறகு ஆறியதும் மிக்சியில் சிறிது கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். நல்லெண்ணெய் விட்டு தாளித்து சர்விங்க் பவுலில் மாற்றவும். சூப்பரான டேஸ்டான கருப்பு உளுந்து &மல்லி சட்னி தயார். இட்லி தோசைக்கு சைட் டிஷ் ஆக மிகவும் டேஸ்ட்டாக இருக்கும்.
கருப்பு உளுந்து பயன்கள்:
1. உடலுக்கு மிகுந்த வலிமையும் ஆரோக்கியமும் தரக்கூடிய பாரம்பரியமிக்க ஒரு சிறந்த உணவு இந்த கருப்பு முழு உளுந்து.
2. இதில் வைட்டமின்கள் புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.
3. இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகள் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல பலத்தை கொடுக்கும். வளரும் பெண் பிள்ளைகளுக்கும் நல்ல வலுவை கொடுக்கும்.
4. இதில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகையை போக்கும்.
5. நரம்புகளுக்கு நல்ல பலம் அளித்து உடல் சோர்வை நீக்கும்.
இது போல கருப்பு உளுந்து சேர்த்து சமைத்துக் கொடுக்க உடல் வலிமை கூடும் என்று ரேகாவிடம் கூறினேன். நீங்களும் இந்த கருப்பு உளுந்து &மல்லி சட்னியை செய்து பயன்பெறவும்.
மேலும் இது இது போன்ற சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் - "சமையல் வித் ஸ்வர்ணா" தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.