சமையல் With ஸ்வர்ணா - மழைக்காலத்திற்கான ஸ்பெஷல் மணத்தக்காளி காய் & பூண்டு குழம்பு!
- ஸ்வர்ணலட்சுமி
மழைக்காலம் வந்தாச்சு. நல்லா காரசாரமா சாப்பிட்டா வாய்க்கு சூப்பரா இருக்கும். அதுக்காகத்தான் மருத்துவ குணங்கள் நிறைந்த மணத்தக்காளி காய் & பூண்டு குழம்பு ரெசிப்பியுடன் வந்திருக்கோம்.
வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாக்கும் சிறப்பான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி இது. கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சட்டென ஒரு குழம்பு சமைக்கலாம்., வாங்க பாஸ்..
தேவையான பொருட்கள்:
1.மணத்தக்காளி காய் -1 கப்.
2. பூண்டு உரித்தது 25.
3. தேங்காய் துருவல் 3 ஸ்பூன்.
4. தக்காளி 2
5. சின்னவெங்காயம் உரித்தது 10.
6. சீரகம் 1/2 ஸ்பூன்.
7. கறிவேப்பிலை 2 கொத்து.
8. மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் (காரம் தேவைக்கு ஏற்ப.)
9. உப்பு தேவைக்கு ஏற்ப.
10. மல்லித்தூள் 3 ஸ்பூன்.
11. வெந்தயம் 1/4 ஸ்பூன்.
12. புளி நெல்லிக்காய் அளவு கரைத்துக் கொள்ளவும்.
13. மஞ்சத்தூள், பெருங்காயத்தூள் தலா 1/4ஸ்பூன்.
14. தாளிக்க நல்லெண்ணெய் 2 ஸ்பூன், கடுகு உளுத்தம் பருப்பு தலா 1/2 ஸ்பூன்.
செய்முறை :
1. வாணலியில் நல்லெண்ணெய் 3 ஸ்பூன் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்.
2. மணத்தக்காளி காய், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3. மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் , மிளகாய்த்தூள், மல்லித்தூள் , உப்பு புளி கரைசல் ஒன்றன்பின் ஒன்றாக சேர்க்கவும்.
4. தேங்காய் துருவல் சீரகம், தக்காளி, கறிவேப்பிலை - மிக்ஸியில் நைசாக அரைத்து, சேர்க்கவும்.
5. நன்றாக கிளறி விடவும் நல்லெண்ணெய் பிரிந்து வரும் வரை குழம்பு நன்றாக கொதிக்க வேண்டும்.
6. கமகமவென மணத்தக்காளிக்காய்- பூண்டு குழம்பு ரெடி.
சூடான சாதத்தை இந்தக் குழம்புடன் சாப்பிட பலே ருசியாக இருக்கும் பாஸ்.
மழைக்காலங்களில் அப்பளத்துடன் சுடச்சுட சாப்பிட இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று வீட்டில் இருப்பவர்கள் கேட்டு சாப்பிடுவார்கள். மார்க்கெட்டுகளில் மணத்தக்காளி காய் கிடைத்தால் உடனே வாங்கி விடுங்கள்.
அன்போடு சமைத்து பாசத்தோடு பரிமாறுங்கள் பாஸ்...
வேலைக்கு செல்வபவர்கள், பள்ளிக் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸுக்கு பேக்கிங் செய்ய டேஸ்டியான, சத்தான குழம்பு இது.
மணத்தக்காளி காய் மோரில் ஊறவைத்து, காயவைத்து வற்றல் குழம்பு ( வத்த குழம்பு) செய்யவும் பயன்படுத்தலாம்.
பயன்கள்:
1. வாரம் இரு முறை இந்த குழம்பு வைத்து சாப்பிட வயிற்றுப்புண், வாய்ப்புண் விரைவில் குணமாகும்.
2. செரிமான மண்டலம் சீராகும்.அஜீரண பிரச்சனைகள் நீங்கும்.
3. இதில் வைட்டமின்கள், இரும்புச் சத்து,பாஸ்பரஸ், மற்றும் நார்ச்சத்து நிறைந்தது.
4. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
மேலும் இது போன்ற மருத்துவ குணம் நிறைந்த சமையல் குறிப்புகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் "சமையல் வித் ஸ்வர்ணா"- தென் தமிழ். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.