சமையல் With ஸ்வர்ணா.. டாக்டர் மாமாவுக்குப் பிடிச்ச ராகி முருங்கை கீரை & பூ அடை!

Swarnalakshmi
Oct 01, 2026,02:18 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


இன்று காலை என் தாய் மாமா டாக்டர். மாணிக்கம் அவர்கள் டிஸ்பென்சரிக்கு செல்வதற்கு முன் எங்கள் வீட்டிற்கு வருகை புரிந்தார். அவர் சீனியர் ரேடியோலோஜிஸ்ட். அவர் என் தந்தைக்கு நிகரானவர். மிகவும் நேசமானவர். ஆனால், அவர் அசைவ உணவு விரும்பி. 


இன்று அக்டோபர் முதல் நாள் 'உலக சைவ தின'த்தையொட்டி நான் என் மருத்துவமனையில் இதனை பற்றி ஒரு உரையாடல் கொடுக்க உள்ளேன் என்று கூறினார்.என்ன? மாமா இந்த தினத்தை பற்றிய ஸ்பெஷல் என்று கேட்டேன்.


அதற்கு டாக்டர் மாமா கூறியதாவது  :


ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் அக்டோபர் முதல் நாள் "உலக சைவதினம்" அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தினம் 1977 ஆம் ஆண்டில் வட அமெரிக்க சைவ சங்கத்தால் உருவாக்கப்பட்டது. இதனுடைய முழுமையான நோக்கம் யாதெனில் சைவ உணவு முறையின் ஏராளமான நன்மைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகவே அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் இந்த தினம் சைவ விழிப்புணர்வு மாதத்தின் (Vegetarian Awareness Month) தொடக்கமாகவும் அமைந்துள்ள சிறப்பான நாள் ஆகும் என்று விளக்கினார். 




பிறகு என்ன? காலை டிபன் என்று கேட்டார். நீங்கள் நீண்ட நாட்களாக விரும்பிய  நம்  பாட்டி வார்த்து கொடுத்த  ராகி அடையை நான்  முருங்கை கீரை & சிறிது என் செடியில் இருந்த முருங்கை பூ கொண்டு தோசையாக வார்த்து உள்ளேன் மாமா என்று கூறினேன். அவர் சாப்பிட்டுவிட்டு பலே ருசியாக இருக்கிறது என்று கூறினார்.


ராகி முருங்கை கீரை & பூ அடை செய்முறை இதோ...


தேவையான பொருட்கள்:


1. ராகி மாவு - ஒரு கப் ( கடைகளில் கிடைக்கும் பாக்கெட் ராகி மாவு).

2. சிறிய வெங்காயம் 20 உரித்து பொடியாக நறுக்கி  கொள்ளவும்.

3. பச்சை மிளகாய் இரண்டு பொடியாக நறுக்கியது. (குறிப்பு: குழந்தைகள் சாப்பிடுவதாக இருந்தால் இதை தவிர்க்கவும்).

4. பொடியாக நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு.

5. முருங்கைப்பூ & முருங்கை இலை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

6. உப்பு தேவைக்கு ஏற்ப.

7. தாளிக்க நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை.


செய்முறை:


1. ஒரு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு வெடித்ததும்  கறிவேப்பிலை  போட்டு தாளிக்கவும்.


2. பொடியாக நறுக்கிய சிறிய வெங்காயம் , முருங்கைக்கீரை, முருங்கைப்பூ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 

3. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூட்டிலேயே ராகி மாவு ஒரு கப் எடுத்து லேசாக பிரட்டவும்.

 (குறிப்பு: ராகி தோசை பிளவுபடாமல் இருக்கும்.)


4. இவை அனைத்தும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு (சிறிது கெட்டியாக ) கலக்கி கொள்ளவும்.


5. தோசை கல் சூடு ஏறியதும் அடுப்பை சிம்மில் வைத்து தோசையாக ஊற்றி  இரண்டு பக்கமும் எண்ணெய் ஊற்றி வார்த்து எடுக்கவும்.


இதற்கு தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி, கார சட்னி , மல்லி சட்னி புதினா சட்னி   - சைட் டிஷ் ஆக வைத்து சாப்பிட அருமையாகவும், சத்தானதாகவும் இருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு நல்ல ஃபில்லிங்கான உணவு.


டாக்டர் மாமா சாப்பிட்டுவிட்டு பலே ருசியாகவும், அருமையாகவும் இருக்கு என்றார்.எனக்கு பாட்டி கையில் சாப்பிட்ட உணர்வு இருக்கிறது என்று என்னை பாராட்டிவிட்டு மருத்துவமனைக்குச் சென்றார்.


என்ன ஃபிரண்ட்ஸ் நீங்களும் செய்து பாருங்கள்.


"உலக சைவ தின"மான இன்று  சைவ உணவிற்கு ஒரு ஓ... போடுவோம். 


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான சமையல் குறிப்புகளுக்கு "சமையல் வித் ஸ்வர்ணா" -  பதிவோடு இணைந்து இருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.