திருச்சி சமயபுரம் மாரியம்மன் பூச்சொரிதல் விழா அல்லது பச்சை பட்டினி விரதம்
- ஸ்வர்ணலட்சுமி
மங்களகரமான விசுவாவசு வருடம் மாசி மாதம் 24 ஆம் நாள் (08.03.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி அளவில் புள்ளம்பாடியின் காவல் தெய்வம் அருள்மிகு ஸ்ரீ குளுந்தாள் அம்மன் கோவிலில் இருந்து வானவேடிக்கையுடன் பளிங்கை வீரா குழுவினரின் மேளதாள நிகழ்ச்சியுடன் சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு அதி விமர்சையாக பூ அலங்காரத்துடன் கூடிய ரதத்தில் பூ எடுத்துச் செல்லப் படும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அது சமயம் பொதுமக்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் திரளாக பல இடங்களில் இருந்து வந்து இவ்விழாவில் கலந்துகொண்டு கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா மற்றும் சமயபுரத்து மாரியம்மன் சிறப்புகளை இத்தலைப்பில் காண்போம்...
சமயபுரம் மாரியம்மன் சிறப்புகள்:
சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பிரம்மா,விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, க்ரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிக்கப்பட்டதால் இத்திருக்கோவில் ஸ்ரீரங்கம் திருக்கோயிலின் மூலவரைப் போன்றே சுதையினால் ஆன சுயம்பு வடிவமாக,27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 இயந்திரங்களால் திருமேனி பிரதிஷ்டையில் இத்தலங்களில் மகாமாரியம்மனாக, சமயபுரம் மாரியம்மன் அருள் பாலிப்பது தனிப்பெரும் சிறப்பாகும்.
அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவகிரகங்களை நவ சர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள் பாலிக்கிறார். சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவகிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். நவகிரக தோஷம் இருந்து திருமணத்தடை உள்ளவர்கள் இக்கோவிலில் தரிசனம் செய்வது சிறப்பு. மேலும் அமாவாசை,பௌர்ணமி நாட்களில் அம்மன் தரிசனம் பெறுவது அதீத சிறப்பு.
மாரியம்மன் வடிவங்களில் ஆதி பீடம் சமயபுரமே ஆகும். உலக நன்மைக்காகவும் இத்திருத்தலத்தில் தன்னை வந்து தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உள்ள நோய்களையும், தீவினைகளும் அணுகாமல் காப்பவளும் இவளே.சகல சௌபாக்கியங்களும் கிடைக்க மரபு மாறி அம்மனே பக்தர்களுக்காக ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் "பச்சைப்பட்டினி விரதம்" இருப்பது இத்திருக்கோயிலில் தனிப்பெரும் சிறப்பாகும்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா விவரம்:
08.03.2026 - முதல் பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பூச்சொரிதல் விழா காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வஜன பூஜைகளுடன் காலை 7:00 மணி முதல் 8:30 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கி பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.
15.03.2026:
பங்குனி மாதம் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் பூச்சொரிதல் விழா.
22.13.2026:
பங்குனி மாதம் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மூன்றாம் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.
29.03.2026:
பங்குனி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நான்காம் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.
05.04.2026:
பங்குனி மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐந்தாம் பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.