ஊடகங்கள், யூடியூப்களில் விவாதிக்கத் தடை விதியுங்கள்.. கோர்ட்டுக்கு கோரிக்கை வைத்த சங்கீதா
சென்னை: தனது கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி செங்கல்பட்டு கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் தங்களது விவாகரத்து மனுவில் முக்கியக் கோரிக்கையாக, ஊடகங்களில் தனது திருமண விவகாரம் குறித்து விவாதிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று சங்கீதா கோரிக்கை வைத்துள்ளார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார். இது பேசு பொருளாகியுள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவில் ஒரு முக்கியக் கோரிக்கையை நீதிமன்றத்திற்கு அவர் வைத்துள்ளார். அதைப் பற்றி யாருமே பேசவில்லை.
சங்கீதா தாக்கல் செய்துள்ள மனு பிரமாணப் பத்திரத்தின் 8வது பக்கத்தில் இடம் பெற்றுள்ள அந்த முக்கியக் கோரிக்கை இதுதான்:
இந்த மனுவின் உட்பொருள் மிகவும் உணர்வுப்பூர்வமானது என்பதால், இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர், எதிர்மனுதாரர் மற்றும் அவர்களது குழந்தைகளின் கண்ணியம், தனி privacy மற்றும் நற்பெயரைப் பாதுகாப்பது அவசியமாகும் என மனுதாரர் கருதுகிறார். எனவே, இந்த வழக்கின் முழு நடவடிக்கைகளையும் ரகசியமாக (In-camera) நடத்துவதற்கு இந்த மாண்புமிகு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் வேண்டுகிறார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான நேர்காணல்கள், பொது விவாதங்கள் அல்லது அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இது குறித்த செய்திகளை வெளியிடுவதிலிருந்து சமூக வலைதளங்கள், யூடியூப் சேனல்கள், ஃபேஸ்புக் பக்கங்கள் மற்றும் இதர ஊடகங்களுக்குத் தடை விதித்து இந்த மாண்புமிகு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு (Interim Order of Injunction) பிறப்பிக்காவிடில், மனுதாரரும் அவரது குடும்பத்தினரும் மேன்மேலும் அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாவார்கள் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது சங்கீதா அஞ்சியது போலவே நடந்து விட்டது. நேற்று இந்த செய்தி வெளியானது முதலே டிவி சானல்கள், யூடியூப் சானல்களில் கடுமையான விவாதங்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.