நிறைய படிச்சேன்.. எனது பிள்ளைகளுக்கு ரோல் மாடலாக இருக்கிறேன்.. அசத்தும் சங்கீதா

Su.tha Arivalagan
Oct 13, 2025,04:04 PM IST

சென்னை: கணவர் இல்லாவிட்டால் ஒரு பெண் எந்த அளவுக்கு தடுமாற்றங்களை, சவால்களை சந்திக்க நேரிடும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இன்று தனது பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல், தன்னைப் போன்ற பல பெண்களுக்கு அருமையான ஒரு ரோல் மாடலாக விளங்குகிறார் சங்கீதா.


நிச்சயம் சங்கீதாவின் கதையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள் இயல்பாகவே துணிச்சலானவர்கள், தைரியம் நிறைந்தவர்கள், சமயோஜிதமாக செயல்படக் கூடியவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கூடவே கல்வியும் துணை நின்றால் அவர்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்று கூறும் அளவுக்கு அத்தனையையும் சாதிப்பார்கள்.


சரி சங்கீதாவின் கதையை அவரிடமே கேட்போம் வாருங்கள்...




என்னுடைய பெயர் சங்கீதப்பிரியா, எனக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் எம் பி ஏ (ஹியூமன் ரிசோர்ஸ் ) பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கிறார். மகள் பிஎஸ்சி (கணினி அறிவியல்) மூன்றாம் ஆண்டு படிக்கிறார்கள். அவர்கள் இருவருக்குமே தந்தையை பற்றியும்  அவருடைய அன்பு, ஸ்பரிசம் என எதையுமே அவர்கள் அறிந்தது இல்லை.  குழந்தைகளின் சிறு வயதிலேயே விபத்தில் இறந்து விட்டார்.


எனது பெற்றோரின் துணையுடன் நான் வாழ்க்கையைத் தொடர்ந்தேன். எங்களது ஆதரவுடன் குழந்தைகள் இன்று இந்த நிலைக்கு உயர்ந்து வந்துள்ளனர். எனக்கு படிப்பு மீது நிறைய மோகம் உண்டு. இரண்டு  பட்டப்படிப்புகள் மற்றும் நிறைய சிறு சிறு படிப்புகள் நிறைய படித்துள்ளேன். இயற்கை வழி மருத்துவ முறையையும் பயின்று இருக்கிறேன்.


நான் ஏன் இவ்வளவு படித்தேன் என்றால், என்னை முன்மாதிரியாக வைத்து என்னுடைய இரு குழந்தைகளும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்பதால்தான். நானும் அவர்களை எல்லா வகையிலும் ஊக்குவிப்பேன்.  அதிலும் என்னுடைய மகள் பிரியவர்ஷினி, என்னைப் போலவே துணிச்சல் தைரியம் மிக அதிகம். நானே ஒரு சில இடங்களில் பயந்து சற்று பின் தங்கினாலும் அவள் என்னை  ஊக்குவிப்பாள்.




சிறு வயது முதலே பள்ளி படிப்பிலும் சரி மேடைப்பேச்சுகள் விளையாட்டுத் துறை பரதநாட்டியம் கீபோர்ட் போன்ற அனைத்திலும் பள்ளி மற்றும் பொது இடங்களிலும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிக்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்றிருக்கிறாள்.  தற்போது டெல்லி நிகழ்வில் கலந்து கொள்வதற்கு விளையாட்டு துறையில்  சிறப்பாக பயின்று வருகிறார். 


பிரியவர்ஷினி இளம் வயதிலேயே கிளாசிக்கல் நடனம் கற்றுக் கொண்டிருக்கிறார். அவரது பெரிய லட்சியமே எதிர்காலத்தில் வக்கீலாக, நீதிபதி வரை உயர வேண்டும் என்பதுதான். ஆனால் தற்போது படிப்பதற்கு குடும்பச் சூழல் இடம் தராததால் வேறு டிகிரியை எடுத்திருக்கிறார். ஆனாலும் கண்டிப்பாக நான் லா படிப்பேன், நீதிபதி ஆவேன் என்று இப்போதும் உறுதியாக கூறி வருகிறார்.


வக்கீலாக படிக்கும் ஆர்வம் இருப்பதால்தானோ என்னவோ நல்ல பேச்சுத் திறமையும் இவரிடம் இருக்கிறது. சூப்பராக பேசுவார். யாரும் இவரிடம் பேசி ஜெயிக்க முடியாதாம். அதேபோல நன்றாக பாடவும் செய்கிறார் பிரியவர்ஷினி. அதாவது ராப் பாடல்களை சூப்பராக பாடுவார். பள்ளி, கல்லூரி நிகழ்வுகளில் இவரது ராப் ஷோ இல்லாமல் முடியாதாம்.




அவர்களுடைய தந்தை இறந்தவுடன் எங்களுடைய வாழ்க்கையே முடிவு பெற்று விட்டது என்று மிகவும் ஆழ்ந்த வருத்தத்திலும் சோகத்திலும் இருந்த எனக்கு வரமாக கிடைத்தவர்கள்தான் என்னுடைய குழந்தைகள் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சங்கீதப்பிரியா.


சங்கீதப்பிரியா இயல்பாகவே நிறைய சுறுசுறுப்பானவராம். தனது அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் ஒருங்கிணைப்பாளராகவும் வலம் வருகிறார்.