சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!
Dec 27, 2025,12:14 PM IST
சென்னை: சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிரந்தரப் பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாகத் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தினக்கூலியாக வழங்கப்பட்டு வரும் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.முறையான கையுறைகள், காலணிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே திரண்ட நூற்றுக்கணக்கான பணியாளர்கள், கோஷங்களை எழுப்பித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். காவல்துறையினர் போராட்டத்தைக் கைவிடுமாறு கூறியும், பணியாளர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி கைது செய்தனர். அவர்கள் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.