Sanju Samson Century: சேப்பாக்கத்தில் சிறப்பான சம்பவம்.. பவுலிங்கிலும் கலக்கிய சிஎஸ்கே!

Su.tha Arivalagan
Apr 11, 2026,05:25 PM IST

சென்னை: ஐபிஎல் 2026 தொடரின் 18-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியான சதத்தை விளாசி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில் பின்னர் பந்து வீச்சிலும் சென்னை அணி அசத்தி அற்புதமான வெற்றியை ஈட்டியது.


நடப்பு சீசனில் தொடக்கத்தில் சற்று தடுமாறிய சஞ்சு சாம்சன், இன்று சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் (சேப்பாக்கம்) தனது பழைய ஃபார்முக்கு திரும்பினார். வெறும் 52 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் தனது அபார சதத்தைப் பதிவு செய்தார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் சீருடையில் அவர் அடிக்கும் முதல் சதமாகும்.


56 பந்துகளில் 115 ரன்களைக் குவித்த சஞ்சு சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. முன்னதாக தொடக்க வீரராகக் களமிறங்கிய சஞ்சு, இளம் வீரர் ஆயுஷ் மத்ரேவுடன் இணைந்து டெல்லி பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.




இந்த சீசனில் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிஎஸ்கே அணிக்கு, சஞ்சுவின் இந்த ஆட்டம் மிகப்பெரிய பலத்தை அளித்தளது.


சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சிஎஸ்கே-விற்கு மாற்றப்பட்ட சஞ்சு சாம்சன், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் முக்கியத் தூணாகவும் உருவெடுத்துள்ளார். சென்னை அணிக்காக முதல் 3 போட்டிகளில் ஏமாற்றினாலும், நான்காவது போட்டியில் நச்சென்று ஒரு சதத்தை விளாசி அசத்தி விட்டார் சஞ்சு சாம்சன்.


"கேரளா சிங்கம் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸில் கர்ஜிக்கிறது" என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் சஞ்சுவின் ஆட்டத்தைக் கொண்டாடி வருகின்றனர். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது, மிக அவசியமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தற்போது சிறப்பான வெற்றியை அது பெற்றுள்ளது.


முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 212 ரன்களைக் குவித்துள்ளது. இந்தப் போட்டியில் வென்றால் இது இந்த சீசனில் சென்னைக்குக் கிடைக்கும் முதல் வெற்றியாக அமையும். சஞ்சு சாம்சன், ஆயுஷ்  மாத்ரே, ஷிவம் தூபே ஆகியோர் சிறப்பாக ஆடினர். பின்னர் பவுலிங்கிலும் சென்னை அணி கலக்கி விட்டது. சிறப்பான பந்து வீச்சால் கடைசி ஓவரில் வைத்து டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை.


சென்னையில் நடந்த  முதல் போட்டியில் தோற்றாலும் இப்போட்டியில் வென்றது சிறப்பான சம்பவமாக மாறி விட்டது.