ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

Su.tha Arivalagan
Mar 08, 2026,08:49 PM IST

அகமதாபாத்: டி 20 உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக 3வது அரை சதத்தை விளாசி அதகளம் செய்துள்ளார் சஞ்சு சாம்சன்.


டி 20 உலகக் கோப்பைத்  தொடரில் தொடர்ந்து அதிரடியான பார்மை வெளிப்படுத்தி வருகிறார் சஞ்சு சாம்சன். இதுவரை இல்லாத அளவுக்கு அவரது ஆட்டத்தில் பயங்கர அனல் பறக்கிறது. பந்தைப் பார்த்தாலே வெறியாகி வெளுத்தெடுக்கிறார் சஞ்சு சாம்சன்.


சஞ்சு சாம்சன் இந்த உலகக்கோப்பையில் தொடக்க வீரராகக் களம் இறங்கி அபாரமான ஃபார்மில் உள்ளார். குறிப்பாக இன்றைய போட்டியுடன் சேர்த்து கடந்த 3 போட்டிகளில் அவரது ஆட்டம் வேற லெவலில் உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஆட்டமிழக்காமல், 97 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் என அசத்திய சஞ்சு சாம்சன் இன்றைய இறுதிப் போட்டியிலும் பிரித்து மேய்ந்து விட்டார்..




நியூசிலாந்துக்கு எதிரான இந்த முக்கியமான ஆட்டத்தில், சஞ்சு சாம்சன் அதிரிபுதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக ரச்சின் ரவீந்திரா பந்தை அவர் 17வது ஓவரில் விரட்டி விரட்டி சிக்ஸருக்கு வெளுத்தது ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளது. கடந்த 2 போட்டிகளில் சதத்தைத் தவற விட்ட சஞ்சு சாம்சன், இன்றைய போட்டியில் அதைத் தொட்டுப் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 89 ரன்களில் ஆட்டமிழந்து விட்டார் சஞ்சு.


இத்தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு, 232 ரன்களுக்கும் மேல் குவித்து இந்தியாவின் டாப் ஸ்கோரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.


ஒரு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் (16 சிக்ஸர்கள்) அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் அவர் முறியடித்துள்ளார்.


தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், தொடர் நாயகன் விருதுக்கான போட்டியிலும் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.