மீண்டும் நீ வேண்டும் பாரதி!

Su.tha Arivalagan
Sep 11, 2026,03:30 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை


எட்டயபுரத்து எழுகதிர் நீ...

எங்கள் உளம் அமர்ந்த தமிழ்ச் சாரதி நீ ...


நாடும் மொழியும் இரு விழியாய் இலங்கிட என்றும் நினைத்தவன் நீ...

ஞானத்தை ஞானத்தில் எடுத்துரைத்தவன் நீ  ...

பாரினில் பெண்மை வாழ்க என்று கூத்திட்டவன் நீ ...


ஆனால், இன்றோ... 


வன்மையால் என் இனம் வாடுவது கண்டு 

வாதாட மீண்டும் வா பாரதி ...


பாஞ்சாலி சபதம் படைத்தவன் நீ.... 

இன்னும் இரவில் எத்தனை துச்சாதனன்கள்...




அவன் தொடைப்பிளக்க  

தோலுரித்துக் காட்டத் 


தீயாய் மீண்டும் வா பார...தீ....

சாதிகள் இல்லையடி பாப்பா என்றவன் நீ...


இன்னும் சாதிகள் கேட்டுக் 

கல்விச் சாலைகள் இருப்பதைக் கண்டு 


சாடிட  மீண்டும் வா பாரதி ....

இயற்கைக்கவி இசைத்தவன் நீ.... 


இன்று அணுவணுவாய் இயற்கை அழிவதைக் கண்டு தடுக்க எவரும் இல்லை ...


எச்சரித்து எடுத்துரைக்க மீண்டும் வா பாரதி....


கண்ணனை அனைத்துமாய்க் கண்டவன் நீ  ...

கருத்தினிலே இறை சக்தி கொண்டவன் நீ.... 


இன்று பக்தி எனப் பொய்யுரைத்துப் 

புகலிடம் கொண்டு வாழ்கின்ற புல்லரைச்


சாட்டை வரி கொண்டு சாத்திட மீண்டும் வா பாரதி...

நானிலம் சிறக்க உன் நாச்சுவையால் மொழிக்கனல் பறக்க 


வேண்டும் நீ.... மீண்டும்... வா.... பாரதி....!


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)