நட்பூ
- கவிஞர் செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
உதிரத்தில் கலவாது
உணர்வுகளில் கலந்த சொந்தம் ...
பெற்றாரும் உற்றாரும் பிரிந்தாலும்
பிரியாத தெய்வீக பந்தம்...
உள் வைத்த பாசத்தின் அளவு
அளவிட முடியாக் கடலின் ஆழம்...
சொல் ஒன்றின் மூலம்
சோகங்களை நீக்கும் பலமோ வேழம் ...
நிலையறிந்து நித்தமும் எடுத்தளிக்கக்
காத்திருக்கும் புதையல்....
வெளிச்சத்தில் மட்டுமல்ல
இருட்டிலும் வழிகாட்டும் ஒளி....
அகமறிந்து புறத்தில் நிஜம் காட்டும் பளிங்கு...
அலையெனத் துயர்வரினும் அரவணைத்துக் காக்கும் கரை ...
யாரிடமும் பகிர முடியாத ரகசியங்களைப் பூட்டி வைக்கும் பெட்டகம்...
தவறு என்று தெரிந்து விட்டால் அகிம்சையால் தண்டிக்கும் ஆசான்...
புகழொன்று பெற்று விட்டால் தோள் தூக்கிச் சுமக்கும் பல்லக்கு...
ஒவ்வொரு நாளும் சந்தோஷ அத்தியாயம் படைக்கும் புத்தகம்...
வறண்ட மனப் பாலைவனத்தைப் பூக்க வைக்கும் புதுமழை...
தூரங்கள் பிரித்தாலும் மனதால் நெருங்கும் இணைப்பறவை...
பலவீனத்தைப் பலமாக்கும் பரிதவிக்க வைக்கா நம்பிக்கை....
இறுதி வரை துணையிருக்க இறைவன் அளித்த வரம் ...
சங்க இலக்கியமோ இக்காலமோ பல பரிமாணங்கள் காட்டுவது நட்பு ....
இந்நட்பு மட்டுமின்றேல் கண்களில் தொடருமே ஈரம் ...
நெஞ்சினில் சேர்க்குமே பெரும் பாரம்....
இதற்கு மறுப்பு தெரிவிப்போர் இருந்தால்.... கூறும்...
இல்லையேல் கை குலுக்கி நட்பாய்ச்... சேரும்
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)