வருமா ஒரு நாள்?
- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
பிறந்து தவழ்ந்து நடை பயின்று
ஓடி ஆடி விளையாடிய மண்ணில்
நான் கால் பதிக்கும் நாள் மீண்டும் வருமா ?
அம்மாவின் கைபிடித்து
ஆசையாய் அலங்காரம் செய்து
நடந்த திருவருணை நகர வீதிகளைக்
காணும் நாள் மீண்டும் வருமா ?
அன்புத் தோழமைகள்
அருகிருந்து கதைத்த கதை
அனு தினமும் சிரித்து மகிழ்ந்த நிலை
இனி ஒரு நாள் மீண்டும் வருமா ?
கார்த்திகை தீபத் திருவிழாவிலே
அதிகாலை வேளையிலே
புதுக்காற்றைச் சுவாசித்து
கிரிவலம் வரும்போது
மனசெல்லாம் நிறைந்து
முகமெல்லாம் புன்னகைக்கும்
புது நாளும் இனி வருமா ?
திருக்கோயில் தனிலே
காலாற நடந்து குளத்தருகே அமர்ந்து
இறைமணம் கமழும்
பவளமல்லிப் பூ வாசமும்
அருள் வடிவான அம்மையப்பனைக் கண்ட அருள் நிலையும்
அனுபவிக்கும் ஒரு நாள் மீண்டும் வருமா ?
இறை காணும் ஏக்கம் மட்டும் பெரிதாகி
என் இறுதி நாட்களுக்குள்ளாவது
காணும் ஒரு நாள் வருமா?
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)