Sarfaraz Khan: சர்பராஸ் கான் அதிரடி கேமியோ.. ஜஸ்ட் 12 பந்துகளில் பட்டையைக் கிளப்பிய 32 ரன்கள்!

Su.tha Arivalagan
Apr 03, 2026,09:25 PM IST

சென்னை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சர்பராஸ் கான் அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 32 ரன்களை அள்ளி எடுத்து அவுட்டானார்.


ஐபிஎல் 2026 தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், அதிரடியாக ஆடிய சர்பராஸ் கான் விக்கெட்டை விஜய் குமார் வைஷாக் கைப்பற்றினார்.


முன்னதாக, இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய சர்பராஸ் கான், வந்த வேகத்தில் பஞ்சாப் பந்துவீச்சை சிதறடித்தார். வெறும் 12 பந்துகளில் 32 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) குவித்து சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார். குறிப்பாக விஜய் குமார் வைஷாக் வீசிய 17-வது ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.




ஆனால் அதே ஓவரின் நான்காவது பந்தில் (16.4 ஓவர்), வைஷாக் வீசிய 'குட் லென்த்' பந்தை சர்பராஸ் தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் பந்து சரியாக பேட்டில் படாமல் காற்றில் எழும்பியது. மிட்-ஆன் திசையில் நின்றிருந்த நேஹால் வதேரா பின்னோக்கிச் சென்று சிறப்பான ஒரு கேட்ச்சை பிடித்தார். 


இதன் மூலம் சர்பராஸ் கானின் அதிரடி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இந்த விக்கெட்டுடன் விஜய் குமார் வைஷாக் தனது 4 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை (ஆயுஷ் மத்ரே மற்றும் சர்பராஸ் கான்) கைப்பற்றினார். ஆனால் சென்னை அணி 190 ரன்களைத் தாண்டி ரசிகர்களை ஹேப்பியாக்கி விட்டது.