பசி ஆற்றும் இறை

Su.tha Arivalagan
Oct 05, 2026,04:48 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


மணிமேகலை தன் ஐந்து வயது மகன்  செந்திலின் விரல் பிடித்து வடபழனியாண்டவர் கோவிலை நோக்கிச் சென்றாள். இன்று கந்த சஷ்டி முடிந்து, தேவயானை திருக்கல்யாணம். ஒரே ஜனக்கூட்டம். குழந்தையின் கையினால் அங்குள்ள பரதேசிகளுக்கு காலை உணவு பொட்டலங்கள்  வழங்கினாள்.


போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் இரண்டு,மூன்று என்று பொட்டலங்கள் வாங்கிக் கொண்டனர். "எல்லோரும் பசியாறட்டும்" என்ற நினைப்பு ஏன் இவர்களுக்கு இல்லை; ஆசை எவரை விட்டது;"என்று நினைத்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டாலும்; வலித்தது.. மக்களின் பேராசையைக் கண்டு. 


அடுத்த வேளைக்கு உணவை பதுக்கி வைக்கும் இயல்பான மானுடம். இன்னும் இரண்டு மூன்று மீதம் இருந்தது.  கோவில்  வாசலில் பவுனாத்தாவிடம் பூஜைக்கு அர்ச்சனைத்தட்டு வாங்கிக் கொண்டாள். 


"அம்மா! எனக்கும் பசிக்கிறது. நானும் ஒரு பொட்டலம் எடுத்து சாப்பிடலாமா"  என்று கேட்டது குழந்தை செந்தில்.." "இல்லேடா!  சாமி பார்த்துட்டு, வீட்டிற்குப் போய் சாப்பிடலாம். அம்மா பாயசம் வடை எல்லாம் பண்ணியிருக்கேன்" என்று சொல்ல அவன் அரைகுறை மனத்துடன் தலை அசைத்தான். 




பவுனாத்தா மகன் ராசப்பா," ஏம்மா! அவர்களுக்கெல்லாம்  மட்டும் கொடுத்தீங்க. எனக்கு மட்டும் கிடையாதா ,என்றான். பவுனாத்தா" தோ! வந்து கட்டையால் நாலு சாத்தரேன்; அதுதான் கிடைக்கும். நீ என்ன; பிச்சைக்காரனா? போடா!  கடையில் போய் உட்காரு." என்று எரிச்சலுடன் மகனைக் கண்டித்தாள். 


மணிமேகலை  செந்திலுடன் கோயில் உள்ளே நுழையும் தருவாயில் , செந்தில் தன் பையிலிருந்து உணவு பொட்டலம் ஒன்றை  எடுத்துக் கொண்டு, ஓட்டமாய் ஓடிப் போய்  ராசப்பாவின் கையில் கொடுத்து," சாப்பிடு" என்றான். " வேணாண்டா! அம்மா திட்டுவாங்க" என்று சொன்னதும், செந்தில்" எனக்கு பசித்து வயறு வலிக்கிறது. அது மாதிரிதானே உனக்கும் வலிக்கும்; சாப்பிடு" என்றான்.


பின்னாலே வந்த மணிமேகலை, " ஒண்ணும் சொல்ல  மாட்டாங்க.  நான் ஒரு பைத்தியக்காரி! அந்த முருகனே உன் வடிவில் வந்து கேட்டான் போலும். அது  புரியாமல் பரதேசிகளுக்கு மட்டும் உணவு கொடுத்தேன்.  பசி எவருக்கும் ஒன்றுதான்.  


பவுனாத்தா மனம் நிறைய நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். ராசப்பா பொட்டலம்  பிரித்து  சாப்பிட ஆரம்பிக்கையில்" வாடா நீயும் சாப்பிடு என்று செந்திலை அழைக்க, இரண்டு குழந்தைகளும் வேடிக்கையாக ஏதோ பேசிக் கொண்டே சாப்பிடுவதைப் பார்த்த மணிமேகலை; அந்த குமரகுருவே தன் மகனுக்கு  நேரில் வந்து உணவளித்ததாக  எண்ணி ஆனந்தம் அடைந்தாள்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)