மடியில் விழுந்த மலர்
-சசிகலா விஸ்வநாதன்
சிவந்து பூத்த மலர்களை எண்ணுகிறேன்...
சிலநேரம்
பட்டாம்பூச்சி பார்வையை மறைக்கிறது...
கிளையில் ஊஞ்சலாடும் சிறு பறவையின் சிவப்பு ஏமாற்றுகிறது...
அணில் ஒன்று காலைச் சுற்றிவர
கணக்கு தவறுகிறது!
முயன்று எண்ணி முடித்து
முப்பது என்று நினைத்ததை
சரி பார்க்க;
மென் தென்றல் ஒன்று வீச;
ஒன்று குறைந்ததா?
ஒற்றை மலரை
மீண்டும் மீண்டும் கண்கள் தேடி சலித்த நொடியில்
மடியில் இருக்கும்
மலரை பாராமல்...
இல்லாத இடம் தேடி சலிக்கும் மனித மனம்!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)