என் கண்ணில் என்ன பார்த்தாய்.. இதுதான் காதலா?

Su.tha Arivalagan
Jun 16, 2026,10:30 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


நினையாத நாளில்

அறியாத நாழிகையில்

புரியாத மொழியில்

கூறிவிட்டாய் நீ;


திடுக்கிட்டு, நான்

திகைப்பை விலக்கி

நாணம் கொண்ட நான்.


நாணம் கொண்ட

என் கண்ணை, 

நேர் கொண்டு நீ பார்த்து;

என்ன தேடினாய்?

தேடிய பொருள் 

கிடைத்ததா; உனக்கு என்னிடம்?




என் கண்ணில் கண்டதை 

நீ விண்டுரைப்பாய் என நானும்; 

நான்

விளம்பிடுவேனன 

நீயும்; 

நீண்ட பொழுது

காத்திருந்தோம்; பொழுதுதான் போனது.


போன பொழுதை பொத்தி வைத்தேன்.

நினைவில், இன்பமாய், இன்று வரை;

திளைக்கிறேன்; இன்னும் புரியவில்லை; 

என் கண்ணில் என்ன பார்த்தாய்? 


உன் கண் சிரித்ததை, நான்

புரிந்து கொண்டேன்.

புரிந்து கொண்டாய்;

நீயும், என் மனதின் மலர்வை,

இதுதான் காதல் என்பதோ?


இன்றுவரை உன்

கண் பார்த்து

நானும்; 

என் கண் பார்த்து

நீயும்; 

காணும் பிழை இன்றி 

கருத்துப் பிழையும்  இன்றி,

சேர்ந்து வாழ்தலின் சுவை அறிந்து;

அவரவர் போக்கின் புரிதலை காத்து;

மதித்து நடக்கும் கலை தெளிந்து;

நம் தேறல் நன்றே


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)