இன்றெனக்கு விடுதலை கிடைத்தது!
- சசிகலா விஸ்வநாதன்
விடுதலை கிடைத்தது,
இன்றெனுக்கு
அமெரிக்க விமான நிலையத்தில்:
காலி மனத்தின்
வெற்று புன்னகை;
மனம் தொடா
நன்றி நவிலல்;
புரியாத அமெரிக்க ஆங்கிலம்;
நித்தம் நித்தம்
நிலையில்லா பணி பயம்;
விசா மறுப்பின் திகில்;
சுழலில் தவிக்கும்
என் நாட்டு இளையோரின் துயரிலிருந்து!
போதைப்பொருளில் சிக்கிய அமெரிக்க இளைஞர்களின் சிதைவு;
அன்றாடம் துப்பாக்கி வன்முறை;
ஒற்றைப் பெற்றோரின் அவலம்;
பல்கலைக்கழக மாணவர்களின் கடன் சுமை;
தோல்வியைத் தாங்க திடமில்லா
அமெரிக்க இளையோரின்
மன உளைச்சலில் இருந்து;
எனக்கு விடுதலை!
தாய் மண்ணே!
வணக்கம்!
தாயகம் திரும்பும்
பெற்றோரின்
மனம் அழுத்தம்
சொல்லும் பாடம்;
பாருக்குள்ளே நல்ல நாடு!
அவரவர்க்கும்,
அவருடைய நாடே!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)