தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
- சசிகலா விஸ்வநாதன்
நீராழி கரையில்,
எண்திசை தெய்வமென
விரிந்த மலராசனத்தில்
அலர் அரவிந்த கரங்கள்;
சிறு உந்திச் சுழலாழி;
அகன்ற மார்பில்
அணி மணிகளுடன்:
முப்புரி நூலும், கங்கணமும்,;
மேல் கை வளைப்பும்;
உயர்த்திய இரு கரங்களில்
சங்கமும், பத்மமும்,
செவ்வாழை பூ நேர்
சங்கு கழுத்தும்;
அதை அணி செய்யும்
கண்டிகையும்;
என் மன்றாடல் கேட்கும்
மகர குழையுடை
நீள் செவியும்;
அருள் பொழி மலர் முகம்
ஒரு மூன்றில்,
பூத்த குமிண் புன்னகையும்;
மோன தவத்தில் அமைந்த
இரு மூன்று கண் மலரும்,
வில்லென வளை
புருவ மத்தியில் நம்
அம்பென எழும்பும்
கூர் நுதல் திலகமும்;
உச்சியில் ஒருங்கும்
மும்முடி மகுடமும்;
காட்டுவெதெல்லாம்; ஒன்றே!
இயற்கையைத் தொழு.!
இயற்கையை நேசி!
இயற்கையை பணிந்து கல்!
இயற்கையிடம் அமைதி கொள்!
மண்ணிலும் விண்ணிலும்- விரி
வானிலும் விசும்பிலும்
நானும் நீயும்
அறியும் செறிவறிவு
வேறெங்கும் நான் காணேனே
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு, மலர் வனம், சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)