ஸ்டார்!
- சசிகலா விஸ்வநாதன்
"உங்களுக்கு, நான்
ஒரு 'ஸ்டார்' கொடுக்கட்டா?"
கேட்டது;
இடுப்பில் கை வைத்து,
வில் என புருவம் உயர்த்தி,
மின்னும் புன்னகை ஒளிர் கண்களுடன்...
சிறு பாவை ஒருத்தி!
சற்றே கடினமான
தமிழ் வார்த்தைகளை
நான் சொல்லி எழுதிய குழந்தை...
சற்றும்
இனி என்னைத் திரும்பியே பாராது;
என்றே நான் நினைத்திருந்தேன்!
புரியாமல்,
நான் விழிக்க;
தளிர் கரங்களால்,
என் அங்கை திருப்பி புறங்கையில் இட்டது
ஒரு சிவப்பு
நட்சத்திர குறியை!
நான் என்ன செய்தேன்!
என்று வினவ;
சொல்லியது:
ஆச்சி!
நீங்க சிறிதும் தவறில்லாமல் தெளிவாக
தமிழ் வார்த்தைகளைச் சொன்னீர்கள்!
அதனால்தானே,
நான் சரியாக
எழுதினேன்!
நல்ல தமிழ் 'மிஸ்'!
என்று சொல்லிக்கொண்டே,
இரட்டைப் பின்னலை பின்னுக்குத் தள்ளி விட்டு ஓடியது!
நான் சொல்லி
பெண் மகவு
எழுதின வார்த்தைகள்...
வெற்றுத் தாள்
குலேபகாவலி
சுடலைக் கண்ணன்
அழகர் மலை
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும், தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)