ஒற்றைச் சொல்
- சசிகலா விஸ்வநாதன்
ஏதோ சொல்ல வாயெடுத்தேன்!
பார்வை எங்கோ திரும்ப;
நான் அதை சொல்லாமல் விட்டேன்!
ஏதோ சொல்ல நான் முனைய;
அலைபேசி அழைக்க;
அப்படியே மௌனமானேன்!
திரும்பவும் என் பக்கம் பார்க்க;
முகம் தீவிர யோசனையில்;
அகத்தில் இருந்தது
வார்த்தையில் வர மறுத்தது!
இன்னுமும் ஒரு முறை
முயற்சிக்க;
"சும்மா இருக்க மாட்டாயா?
வீட்டிற்கு வந்து பேசலாமே" என்பது
போல் சைகை!
மூக்கு கண்ணாடி கடையில்
பேரம் படிந்த பின்
அலைபேசியை தேட ஆரம்பிக்க;
"அது வீட்டில்
மின்னுட்டத்தில்"
என்றதும்;
முகம் சிவந்தது;
கோபத்தினாலா?
கழிவிரக்கத்தினாலா?
ஆதங்கத்திலா?
"முதலிலேயே சொல்வதற் கென்ன?" என்று வெடிக்க;
அதை சொல்லத்தான்
இவ்வளவு நேரமும்
முயன்றேன்!
என்றபடியே,
என் திறன்பேசியைக் கொடுக்க;
"தேங்க்ஸ்" என்ற
ஒற்றை வார்த்தையில்;
நான்
நிம்மதியாகப் பெருமூச்சு விட்டேன்
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு, மலர் வனம், சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)