இள மீனாள்!
- சசிகலா விஸ்வநாதன்
விரி செங்கமல மலர் வதனி!
உச்சித் திலகம் ஈசனின் நுதல் கண்!
ஆக்ஞா சக்கரத்தின் மையம்!
கருணையுடன் சுழலும் இமையா கண்மலர்கள்!
இள மூங்கிலனைய தோளில் துவளும் தோமாலை!
சரி கொண்டையின்று
கருநாக அணி பின்னல் நுனி குஞ்சம்!
ஐயனின் உடுக்கை யென்று சிறுத்த துடியிடை!
இடையை அலங்கரிக்கும் பச்சை பட்டாடை!
"சிவ! சிவ!" என கொஞ்சும் சலங்கை ஒளி!
'ஓம்! ஓம்!' என ஒலிக்கும் மணி நூபுரம்!
செம்பஞ்சு குழம்பு மினுங்கும் அரவிந்த பாதங்கள்!
எம் மனதை விட்டு
என்றும் அகலாதிருக்க அன்றி,
வேறொன்றும் வேண்டேன்;
இள மீனாளே!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)