Short Story: மீளுதல்!
Sep 29, 2026,01:57 PM IST
- சசிகலா விஸ்வநாதன்
சந்திரா இருபது வருடங்களுக்குப் பிறகு பெரியகுளம் திரும்பி வருகிறாள். எந்த சூழலில் அவள் அங்கிருந்து கிளம்பினாள் ; என்று நினைக்க,இன்றும் மனம் நடுங்கியது.
கள்ளபட்டி தாண்டியதுமே அவள் வந்த கார் பழுதாகி நின்றது பேருந்து ஏதும் நிற்காமல் போக, மாட்டுவண்டி ஒன்று வந்ததைப் பார்த்து, கையசைத்து நிறுத்தினாள். வண்டிக்காரனைப் பார்த்தவள், அவன் ஜாடையில் சம்புலிங்கம் ஒத்திருந்தான். அவளை ஏற,இறங்க பார்த்தவன்;
"ஏம்மா! பெரிய வீட்டு பாட்டி மாதிரியே இருக்கே. அம்மா முடியாமத்தான் இருக்காங்க. வாங்கம்மா! ஏறுங்க!" என்றான். " ஏ! புள்ளே! தேவயானி! அவங்க வசதியாக இருக்கட்டும்! நீ பானையை எடுத்துட்டு வண்டியோடு நடந்து வா" என்றதும் அவள் குதித்து கீழே இறங்கி, இவளுக்கு கைலாகு கொடுத்து ஏற்றி விட்டாள்.
அன்று மட்டும் தன்னை இதே மாதிரி,' ஏறுடா' என்று சொல்லி கருக்கல் நேரத்தில் சாரதா பாட்டி, சம்புலிங்கத்தின் கூண்டு வண்டியில் ஏற்றி, கொடை ரோட்டில் ரயில் ஏற்றி விடாமல் இருந்திருந்தால் தான் இந்த ஊரிலேயே ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி சிதைந்து போயிருப்பேன், என்று நினைத்துக் கொண்டாள்.
சென்னையில் பாட்டியின் அண்ணா,அவனுக்கு மருத்துவ உதவிகள் செய்து, படிக்க வைத்து, ஆளாக்கினார். அவர்களது கருணையினாலும், சம்புலிங்கம் காலத்தில் செய்த உதவியாலும் தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறோம், என்று நினைக்க, அவள் மனம் நன்றியால் நிறைந்தது.
"அம்மா! வீடு வந்திருச்சு. இறங்குங்க" என்றதும் சந்திரா, "சம்புலிங்கம் எப்படி இருக்கார், என்று விசாரித்ததற்கு, வண்டிக்காரன், அவளை மீண்டும் ஏற இறங்க பார்த்தான்." அவரு போய் சேர்ந்து வருஷம் பத்தாச்சு" என்றவனிடம்" மிக்க நன்றி. " என்று பாட்டியைப் பார்க்க உள்ளே நுழைந்தாள் சந்திரா.
மீண்டும் வண்டியில் ஏறிய தேவயானை, "ஏங்க! அவங்க குரல் ஒரு மாதிரி கரகரப்பாக, ஆம்பிளை குரல் போல் இருக்கு?" என்று வினவ, அவன் " தொண்டை கட்டோ; என்னமோ? நமக்கெதற்கு, பெரிய வீட்டு சமாச்சாரங்கள்?" என்று சொல்லி வண்டியைத் திருப்பினான்.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)