அன்பின் அணைப்பு
- சசிகலா விஸ்வநாதன்
எதிர்பாராமல் வேலை போய் விட்ட விரக்தியில் பகலில் கடற்கரைக்கு வந்திருந்தாள், ஸ்யாமளா. நேற்றுதான் அவளுடைய பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர். அவர்கள் வருகைக்காக நிறைய ஏற்பாடுகள் செய்திருந்தாள். இந்த விஷயம் தெரிந்தால், அவர்கள் எத்தனை வருத்தம் அடைவார்கள்!
வேலையில்லாமல் அமெரிக்காவில், ஒரு நாள் கூட வாழ முடியாது. அறுபது நாள்களுக்குள் எப்படி வேலை கிடைக்கும்? நினைக்க, நினைக்க துக்கம் அவளை விழுங்கியது. செய்துவிடலாம், போலிருந்தது. அதற்கும் துணிவு வேண்டுமே!
கண்ணை மூடிய வண்ணம் மெதுவாக அலைகளுனூடே நடக்க ஆரம்பிக்கும் சமயம், பெரிதாக அலை அடிக்க தடுமாறி விழுந்தவள், தன்னையும் அறியாமல் எழுந்திருக்க முயலும் சமயம், வலுவான கரம் ஒன்று, அவளைத் தூக்கி நிறுத்தி அணைத்தது. காதலன் ரகுநந்தன் தான்.
அவளது அலைபேசி இருக்குமிடத்தை அறிந்து கொண்டு, அவளைத் தேடி வந்திருக்கிறான்." ஸ்யாமளி! என்ன இது? என்ன ஒரு முட்டாள்தனமான முடிவு? ஒரு வேலை போய்விட்டால், உயிரைப் போக்கிக் கொள்ள நினைப்பாயா? வேறு வேலை கிடைக்காது; என்று எப்படி நினைத்தாய்? என் அழைப்பிற்கு பதில் அளிக்காமல் இருந்ததினால், உன்னைத் தேடியே நான் வந்தேன். நல்ல வேளையாய் போயிற்று.
நீ இன்றி நான் எப்படி வாழ்வேன்? ஊரிலிருந்து வந்திருக்கும் உன் பெற்றோரை நிலைமை என்னவாகும்; என்று ஒரு நிமிடம் யோசித்து பார்க்க மாட்டாயா? நாளை உனக்கு வேலைக்கான ஒரு நேர் காணல் இருக்கிறது. தைரியமாக நேர்காணலை சந்தி. வாழ்வில், விழுவதும் தோற்பதும் சகஜம். விழுந்தவன் எழுந்திருக்கவும், தோற்றவன், போராடவும் முயல, வாழ்வில் சோதனைகள் சாதனைகளுக்கான சந்தர்ப்பங்களே!
நான் கூட நிற்கும்போது உனக்கு ஏன் அச்சம்?வா! வாழ்வின் சவால்களை சேர்ந்தே சந்திக்கலாம்." என்றவுடன், துணிவுடன் சற்றே புன்னகைத்தாள்; ஸ்யாமளி.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)