வேறு முகங்கள்!

Su.tha Arivalagan
Sep 23, 2026,01:14 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


அசோகனும், சுந்தரியும்  ஒரே நேரத்தில் இல்லம் திரும்பினார்கள். "சுந்தரி!  சூடா  காஃபி எடுத்து வா!" என்றவன், ஹாலில் சோஃபாவில் சரிந்து படுத்தான். 


"இன்னிக்கு டின்னர், ஏதாவது ஸ்பெஷலா  ஆலு பரோட்டா- குருமா இல்லேனா;  வெஜ் பிரியாணி; இப்படி; ஏதாவது பண்ணேன். சும்மா தோசை, சப்பாத்தின்னு ராவிடாதே." சுந்தரி ஏதோ சொல்ல வாயெடுத்தாள். 


"என்ன சொல்லப் போறே!  தலைவலி; டயர்டா இருக்கு;  ஆஃபிஸ் வேலை ; அரை மணியில் ஜும் மீட்டிங்; இப்படி உப்பு சப்பில்லாத காரணங்கள்  தானே தினமும் சொல்றே! " என்று எரிந்து விழுந்தான்.


மறு வாரம் அசோகனின் தங்கை சாருமதி வீட்டிற்கு  கார்த்திகை சீர் கொடுப்பதற்காக இருவரும் போனார்கள்.  சாருமதி,வர தாமதமானது. 


"சாரி! அண்ணி! பஸ்  வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது . வந்த பஸ்ஸும் பாதியில் ப்ரேக் டௌன் ஆகி, மாற்று பஸ் கிடைத்து வருவதற்கு ரொம்ப லேட் ஆகிவிட்டது. இருங்க! நொடியில் டீ  போட்டு எடுத்து வரேன்." என்று பரபரத்தாள்.




"சாரு! ரிலாக்ஸ். எதுக்கு இந்த பரபரப்பு? ஆஃபிஸ்ல வேலை! பஸ் ஃப்ரேக் டௌன்.  எதுக்கு இத்தனை ப்ரஷர்  எடுத்துக்கறே.  உன்  ஹெல்த்துக்கும் ஆகாது. மனசுக்கும்  ஒவ்வாது. இரு! நான் போய் டீயும் ஸ்நாக்கும் வாங்கி வரேன்! ஓ! உனக்கு காஃபி தானே!  மாப்பிள்ளை வர நேரம் தானே! அவருக்கும் சேர்த்து காஃபி வாங்கி வரேன். டின்னருக்கு சங்கம் ஹோட்டல்  சரியாய் இருக்குமா?" என்று பேசிக்கொண்டே போன, அசோகனை வியப்புடன்  பார்த்த சுந்தரி, அயர்ந்து போனாள்.


அவன் முகத்தில் கொஞ்சம்கூட  கடுப்போ, எரிச்சலோ இல்லை. சாருமதியின் மேல் இருக்கும்.  அனுசரணை மட்டும் தான் இருந்தது. இது வேறு  ஆள்! இவள் கணவன் அசோகன் இல்லை! சாருமதியின் அண்ணன், அசோகன்.


கேட்டை திறக்கும் போது, பக்கத்து வீட்டு அனிதா, அப்போதுதான் உள்ளே நுழைந்ததைப் பார்த்தவன், " அனிதா! ஏன் லேட்?" என்று பரிவாக கேட்டான். " ஏன் , அசோக்! அந்த துயரத்தை ஏன் கேட்கிறே?  ஸபர்பன்  ட்ரெயின் மாம்பலம் தாண்டி  கேபிள் கோளாறு. ஒரு மணி நேரம்,  நின்னுடுச்சு. அவன் வருவதற்குள், இட்லி ஊத்தி, சட்னி மட்டுமாவது செய்தாகணும். அவன் சரியான பசியில் வருவான். என் கஷ்டம் என்னோடு. அவன் அதை  ஒருபோதும் அறிய மாட்டான்." என்று சலித்துக் கொண்டாள். 


"ஏன் அனிதா! சங்கரும் தான் வேலை பார்க்கிறான்!  அவனும் பாவம் தானே! கணினி வேலையில் ரொம்பவும் ஒர்க் ப்ரஷர், இல்லையா? நீ தான் அனுசரணையாக இருக்கணும்" என்றான், அசோக். "தம்பி! அசோக்! நானும் தான் கணினி கம்பெனியில் வேலை செய்யறேன். அவனை விடவும் டிமேண்டிங் வேலை. சரி! விடு! உன்கிட்ட  புலம்பி என்ன ஆகப்போகிறது? அவன்தான் என்னை , என் வேலையின் நிலையை புரிஞ்சுக்கணும். கைதட்டி  மகிழ்ச்சியடைய இரண்டு கைகளும் சேர்ந்தே இசைக்கணும். அப்பந்தான் கரவொலி வரும். ஒரு கை அசைய ஓசை வராது." என்று  அனிதா படியேறிச் சென்றாள்.


"சம்பாதிக்கிற பொண்ணுங்களை கட்டினா; இதான் தொந்தரவு. நீயும் நானும் சமம்; ங்கற மாதிரி நெனச்சுப்பாங்க. அவங்களுக்கு இடம் கொடுத்தா, மடத்தை பிடுங்குவாங்க!  பாரேன், சுந்தரி! அனிதா, எப்படி பேசிவிட்டு போகிறாள்!" என்று பேசியது, சுந்தரிக்கு  வியப்பாக இல்லை. அனிதா, அவன் தங்கை சாருமதி, இல்லையே!  அடுத்த வீட்டுப் பெண்தானே!


வீட்டினுள் வந்தவன், "சுந்தரி! இஞ்சி முனைப்புடன் டீ போட்டு கொண்டு வா! டீயை ருசித்தவன், "ஏலக்காய் சேர்த்திருக்கலாம்.  ஒவ்வொண்ணும் சொல்லணுமா?  எப்பதான் என் மனம் அறிந்து நடக்கப் போகிறாய்? கல்யாணமாகி  மூன்று வருடங்கள் ஆகிறது.எனக்கு 8 மணிக்கு  ஃஆபிஸ் ஜும் மீட்டிங் உள்ளது. அதற்குள் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்." என்றவன், கண்மூடி உறங்க ஆரம்பித்தான்.


"என் மனம், என் வேலை, என் வலி,  உனக்கு என்று புரியப் போகிறது?" என்று  தன் மனதிற்குள்ளாகவே கேட்டுக் கொண்டே தன் ஜூம் மீட்டிங்கை;  இரவு மணி பத்துக்குத் தள்ளி வைத்தாள், சுந்தரி.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன். எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)