கொழுக்கட்டை
- சசிகலா விஸ்வநாதன்
பெரியப்பா வீடு கல கலப்பாய் இருந்தது. அவர் பெண் விஜி தன் கணவர் ராமசந்திரன், மற்றும் மகன் ராஜா ராமனுடன் கரக்பூரிலிருந்து வந்திருந்தாள். நானும் எனது கல்லூரி விடுதியில் இருந்து அவளைப் பார்க்க இல்லம் வந்திருந்தேன். எல்லோரும் மாலையில் கோவில் சென்றிருந்தோம்.
அம்மன் சந்நிதிக்கு முன்பாக நான்கு சக்கரம் வைத்த கை வண்டி ஒன்றை பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். பெரியப்பாவின் விரல் பிடித்து நடந்து கொண்டிருந்த ராஜா ராமன் வண்டியை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்."தாத்தா! இது என்ன வண்டி?" என்று கேட்கவும், பெரியப்பா, " அது" கொளகட்டை ஏற்றி வரும் வண்டி.
பிள்ளையார் சதுர்த்திக்கு மூணு குறுணி அரிசி மாவு போட்டு,, மூணு வித பூரணத்தையும் வைத்து ஒரே ஒரு பெரிய "கொளக்கட்டை" செய்து, இந்த வண்டியில் வைத்து , அதோ, அந்த முக்குறுணி விநாயகருக்கு படைப்பார்கள்" என்று விளக்கினார்." தாத்தா!
கொளக்கட்டை எப்படி இருக்கும்? கொளக்கட்டை என்றால் என்ன , தாத்தா? என்று கேட்டான். " ஏண்டா! உன் அம்மா உனக்கு கொளக்கட்டை பண்ணி தந்ததில்லையா?" என்று கேட்டு விட்டு; திரும்பி தன் பெண் விஜியைப் பார்த்து, ஏம்மா! விஜி! இவனுக்கு கொளக்கட்டை பண்ணிக் கொடுத்ததே இல்லையா! ," என்று கேட்டார்.
அடிக்கடி பண்ணுவேனே; அப்பா! அவனுக்கு ரொம்ப பிடிக்குமே. ஏண்டா! ராஜா! அம்மா உனக்கு கொழுக்கட்டை பண்ணி தந்ததில்லயா? என்று கேட்டாள்.
ராஜா, இல்லேம்மா! தாத்தா கொளக்கட்டை ன்னு சொன்னா. அதுதான் " என்ன" ன்னு கேட்டேன். என்றதும் நாங்கள் எல்லோரும் " கொல்" என்று சிரித்து விட்டோம், பெரியப்பா உள்பட.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)